Published : 28 Jul 2023 06:42 AM
Last Updated : 28 Jul 2023 06:42 AM
சென்னை: சென்னையில் வாகனங்களின் அனுமதிக்கப்பட்ட வேகம் 40-லிருந்து 60 கி.மீட்டராக உயர்த்த சென்னை போக்குவரத்து போலீஸார் ஐஐடி உட்பட துறை சார்ந்த வல்லுநர்களுடன் ஆலோசித்து வருகின்றனர். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.
விபத்துகள், விபத்து உயிரிழப்புகள் மற்றும் போக்குவரத்து நெரிசலை முற்றிலும் குறைக்க சென்னைபோக்குவரத்து போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாகபோக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு உயர்த்தப்பட்ட அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
அதுமட்டுமல்லாமல், ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்களை நிறுவி அதில் பதிவாகும் காட்சிகளின் அடிப்படையிலும் விதிமீறல் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு, அதற்கான ரசீது சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்களின் செல்போனுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
சாலை விபத்து உயிரிழப்பு: குறிப்பிட்ட நாட்களுக்குள் அபராதம் செலுத்தாதவர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. போக்குவரத்து காவல் விதிகள் மற்றும் கடுமையான அமலாக்கம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் முன்முயற்சிகள் காரணமாக கடந்தஆண்டு 573 ஆக இருந்த சாலை விபத்துகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 508 ஆக குறைந்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் 241 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டைவிட நடப்பு ஆண்டு இறப்பு விகிதம்குறைந்துள்ளது என போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுஒருபுறம் இருக்க, சென்னையில் வாகனங்களின் அனுமதிக்கப்பட்ட வேகம் 40 கி.மீட்டராக உள்ளது. இவ்வேகத்தை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து போலீஸார் எச்சரித்தனர்.
ஆனால், இதற்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து 40 கி.மீ. வேகம் என்பதை மேலும் எத்தனை கி.மீ. வேகமாக உயர்த்தலாம் என போக்குவரத்து போலீஸார் ஐஐடி மற்றும் துறை சார்ந்த வல்லுநர்களுடன் தொடர்ந்து ஆலோசித்து வருகின்றனர்.
இதில், 60 கி.மீ. வேகமாக உயர்த்தி நிர்ணயிக்கலாம் என்றமுடிவுக்கு போக்குவரத்து போலீஸார் வந்துள்ளனர். இந்த பரிந்துரையை தமிழக அரசுக்கு போக்குவரத்து போலீஸார் விரைவில் அனுப்பி வைக்க உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT