Published : 28 Jul 2023 06:12 AM
Last Updated : 28 Jul 2023 06:12 AM
சென்னை: பெரியபுராணத்தை எழுதிய சேக்கிழாரின் ‘தெய்வச் சேக்கிழார் விழா’ திருவான்மியூரில் வரும் 30-ம்தேதி வரை நடைபெறுகிறது.
முதன்மையான தமிழ் இலக்கியங்களில் ஒன்றான பெரியபுராணத்தை நமக்கு வழங்கிய சேக்கிழாருக்கு, சென்னை சேக்கிழார் ஆராய்ச்சி மையம் ஆண்டுதோறும் சேக்கிழார் விழாவை நடத்தி வருகிறது. அதனடிப்படையில் நடப்பாண்டு சேக்கிழார் ஆராய்ச்சி மையம், ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவம் மற்றும் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து நடத்தும் 31-ம் ஆண்டு ‘தெய்வச் சேக்கிழார் விழா’ சென்னையில் நேற்று தொடங்கியது.
இந்த விழா வரும் 30-ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெறவுள்ளது. முதல் நாளானநேற்று, குன்றத்தூரில் உள்ளதெய்வச் சேக்கிழார் திருக்கோயிலில் சிறப்பு அபிஷேகமும், வழிபாடும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கோயிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சேக்கிழார் ஆராய்ச்சி மையத்தின் செயலாளர் சிவாலயம் ஜெ.மோகன் பங்கேற்றார்.
இரண்டாம் நாளான இன்று(வெள்ளிக்கிழமை) ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் மங்கல இசையுடன் தொடங்கும் நிகழ்ச்சிக்கு பின், ‘தமிழ் திருத்தொண்டர்கள்’ என்ற நூலின் முதல்பிரதியை, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வெளியிடவுள்ளார். திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் அந்த நூலைப் பெற்றுக்கொள்கிறார். பின்னர் முனைவர் இரா.மாது தலைமையில் மாணவர் உரை அரங்கமும், பத்மஸ்ரீ நர்த்தகி நடராஜனின் ‘அலகில் ஆனந்த கூத்து’ என்ற நடன இசை நிகழ்ச்சியும் அரங்கேறவுள்ளன.
இவற்றை தொடர்ந்து, விருது வழங்கும் நிகழ்வில், சேக்கிழார் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் எஸ்.ஜெகதீசன், விஐடி மற்றும் தமிழியக்கத்தின் நிறுவனத் தலைவர் கோ.விஸ்வநாதன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் அவ்வை அருள் ஆகியோர் சிறந்த பேராசிரியருக்கான சேக்கிழார் விருதுகளைத் தேர்ந்தெடுக்கப்பட்ட பேராசிரியர்களுக்கு வழங்குகின்றனர்.
அதைத் தொடர்ந்து 3-ம் நாள் (சனிக்கிழமை) விழாவில், கோவை சிவப்பிரகாச சுவாமிகளின் அருளுரை, கலைமாமணி சசிரேகா பாலசுப்பிரமணியத்தின் ‘நாட்டம் மிகு தண்டியார்’ என்ற நடன இசையுடன் விழா தொடங்குகிறது.
இதில் ‘புதிய கோணத்தில் புராணம்’என்ற தலைப்பில் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமையில் முனைவர்கள் பாலறாவாயன், சாரதா நம்பி ஆரூரன், எம்.கே.பிரபாகரமூர்த்தி ஆகியோர் உரையாற்றவுள்ளனர். அதைத் தொடர்ந்து தேவாரம் இசை, பண்ணாராய்ச்சி அரங்கம், பள்ளிமாணவர் உரையரங்கம், மூவர்முதலிகள் மன்றம் நடத்தப்படஉள்ளன.
இதையடுத்து 4-ம் நாள் விழாவில், வழக்கறிஞர் த.ராமலிங்கம் தலைமையில் இளையோர் அரங்கம், கவிஞர் இரா.கங்கை மணிமாறன் தலைமையில் கவியரங்கம், பா.சற்குருநாத ஓதுவார் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி, பெரியபுராணம் தொடர்பான ஆய்வரங்கம் முதலியன நடைபெறுகின்றன. இவற்றை தொடர்ந்து திண்டுக்கல் சிவபுர ஆதினம் ஸ்ரீலஸ்ரீ திருநாவுக்கரசு தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் சிறப்பு நடுவராகப் பங்கேற்கும் பாங்கறி மன்றமும் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வுகளில் சேக்கிழார் ஆராய்ச்சி மையத்தின் பொருளாளர் லட்சுமிதேவி, துணைச் செயலாளர் அ.க.ராஜாராமன், தமிழ் பல்கலைக்கழக பேராசிரியர் நல்லசிவம், அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT