Published : 28 Jul 2023 06:02 AM
Last Updated : 28 Jul 2023 06:02 AM
சென்னை: பருவமழையின்போது தடையற்ற மின் விநியோகம் செய்யும் வகையில், அவசரகால பணிகளுக்கு நிதி ஒதுக்க மின் தொடரமைப்புக் கழகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இது தொடர்பாக மின் தொடரமைப்புக் கழக இயக்குநர் (இயக்கப் பிரிவு) அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, அவசரகால பணிகளை அவ்வப்போது மேற்கொள்ள வேண்டியிருக்கும். இதற்காக சென்னை வடக்கு, தெற்கு, ஸ்ரீபெரும்புதூர் வட்டங்களுக்கு தலா ரூ.10 லட்சம், 133 இயக்கப் பிரிவு அலுவலகங்களை உள்ளடக்கிய திருவலம், விழுப்புரம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, சேலம், கோவை ஆகிய இயக்கப் பிரிவு வட்டங்களுக்கு தலா ரூ.8 லட்சம் ஒதுக்க ஒப்புதல் வழங்கப்படுகிறது.
இந்த தொகை மூலம் துணைமின் நிலையங்களில் மழைநீர் புகாதவாறு மணல் மூட்டைகளை ஏற்பாடு செய்ய வேண்டும். மழைநீர் தேங்கினால், அவற்றை வெளியேற்றுவதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். போதிய உபகரணங்களைக் கொள்முதல் செய்ய வேண்டும்.
பேரிடர் நிதி... மேலும், மின்தடையை சரிசெய்ய போதிய ஊழியர்களை நியமிக்க வேண்டும். தொடர் பணியில் ஈடுபடுவோருக்கு சிற்றுண்டி போன்றவற்றை வழங்க வேண்டும். டிராக்டர், பொக்லைன் வாகனங்களை வாடகைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். குறிப்பிட்ட தொகையை பேரிடர் நிதி என்ற அடிப்படையில் சேமித்துவைத்து, முக்கியப் பணிகளுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT