Published : 28 Jul 2023 06:08 AM
Last Updated : 28 Jul 2023 06:08 AM
சென்னை: அடுக்குமாடிக் குடியிருப்புகள் பதிவில் புதிய நடைமுறையைக் கொண்டு வருவது குறித்து ஒருவாரத்தில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.
பதிவுத் துறை நடைமுறைகள், சேவைகள் தொடர்பான கருத்துகேட்புக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், துறைச் செயலர் ஜோதி நிர்மலாசாமி, பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் கூடுதல் தலைவர்கள் பங்கேற்றனர்.
மேலும், அகில இந்திய ரியல்எஸ்டேட் அசோசியேஷன், கிரெடாய், சிஐஐ, டான்ஸ்டியா, இந்திய கட்டுநர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று, அண்மையில் தமிழக அரசால் உயர்த்தப்பட்ட பொது அதிகார ஆவணக்கட்டணம் உள்ளிட்டவற்றைக் குறைக்க வேண்டும், பதிவு நடைமுறையில் திருத்தம் செய்ய வேண்டும், நில வழிகாட்டி மதிப்பு திருத்தம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
பின்னர், அமைச்சர் பி.மூர்த்திசெய்தியாளர்களிடம் கூறியதாவது: பதிவுத் துறையில் 10ஆண்டுகள் இல்லாத வகையில் 2022-23-ல் ரூ.17,299 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. நடப்பாண்டில் இதுவரை ரூ.5,342 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
போலி ஆவணங்களை ரத்து செய்ய புதிய சட்டம் இயற்றப்பட்டு, 10,555 மனுக்கள் மீது இறுதியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில், 959 ஆவணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பதிவுத் துறையில் ஸ்டார் 3.0 திட்டம் புதிதாக உருவாக்கப்பட உள்ளது. ஆள்மாறாட்டத்தை ஒழிக்க ஆதார் தரவுடன் விரல் ரேகை, கருவிழிப் படலம்சரிபார்க்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. மையக் கணினியில் ஆவணங்களைத் திருத்தம் செய்யமுடியாத வகைையில் ‘பிளாக்செயின்’ தொழில்நுட்ப வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
கருத்துகேட்புக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகளை முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசென்று, அவற்றை நிறைவேற்றுவது குறித்து பரிசீலிப்போம்.
2012-ல் இருந்த வழிகாட்டி மதிப்புதான் தற்போது மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது. பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில்தான் குறைந்த பதிவுக் கட்டணம், வழிகாட்டி மதிப்பு உள்ளது.
அடுக்குமாடிக் குடியிருப்புகள் பதிவுகளைப் பொறுத்தவரை, பிற மாநில நடைமுறைகளை ஆய்வு செய்து, கருத்துகளைக் கேட்டு, புதிய நடைமுறையைக் கொண்டு வருவது குறித்து ஒரு வாரத்தில் அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT