கவுன்சிலர்கள் திமுகவுக்கு மாறியதால் அதிமுகவிடம் இருந்து பறிபோகும் நத்தம் ஒன்றிய தலைவர் பதவி

கவுன்சிலர்கள் திமுகவுக்கு மாறியதால் அதிமுகவிடம் இருந்து பறிபோகும் நத்தம் ஒன்றிய தலைவர் பதவி
Updated on
1 min read

நத்தம்: அதிமுக கவுன்சிலர்கள் திமுகவுக்கு மாறியதால் பெரும்பான்மையை இழந்த நிலையில் நத்தம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவியை அதிமுக இழக்க உள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 14 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதில், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக 9 ஒன்றியங்களில் தலைவர் பதவிகளை கைப்பற்றியது. வடமதுரை, நத்தம், நிலக்கோட்டை, வேடசந்தூர், குஜிலியம் பாறை ஆகிய 5 ஒன்றியத் தலைவர் பதவிகளை அதிமுக கைப்பற்றியது.

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பின்பு அதிமுக வசம் உள்ள ஒன்றியத் தலைவர் பதவிகளை கைப்பற்ற திமுகவினர் முயற்சி மேற்கொண்டனர். வேடசந்தூர், குஜிலியம்பாறை ஒன்றியங்களில் அடுத்தடுத்து அதிமுக கவுன்சிலர்கள் திமுகவுக்கு மாறியதால், அதிமுக ஒன்றியத் தலைவர்கள் பெரும்பான்மையை இழந்தனர்.

இதனால் அவர்களின் பதவி பறிபோனது. அந்த 2 ஒன்றியங்களிலும் தலைவர் பதவியை திமுக கைப்பற்றியது. தற்போது வடமதுரை, நத்தம், நிலக்கோட்டை ஆகிய ஒன்றி யங்களில் மட்டும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் ஒன்றியத் தலைவர்களாக உள்ளனர். இந்நிலையில், நத்தம் ஒன்றியத் தலைவர் பதவியை கைப்பற்ற திமுக களம் இறங்கியது.

நத்தம் ஒன்றியத் தலைவராக முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர்.விசுவநாதனின் மைத்துனர் ஆர்.வி.என்.கண்ணன் உள்ளார். நத்தம் ஒன்றியத்தில் மொத்த முள்ள 20 கவுன்சிலர்களில் அதிமுக வுக்கு 15 கவுன்சிலர்களும், திமுகவுக்கு 5 கவுன்சிலர்களும் இருந்தனர். ஒரு மாதத்துக்கு முன்பு நத்தம் ஒன்றியத்தைச் சேர்ந்த அதிமுக கவுன்சிலர்கள் 5 பேர் அமைச்சர் அர.சக்கரபாணி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

இதனால் திமுக கவுன்சிலர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது. தற்போது மேலும் 2 அதிமுக கவுன்சிலர்கள் திமுகவுக்கு அணி மாறியுள்ளனர். நேற்று முன்தினம் இரவு அதிமுக கவுன்சிலர்கள் பிள்ளையார்நத்தம் பெசலி சின்னடைக்கன், செந்துறை சார்லஸ் ஆகியோர் அமைச்சர் அர.சக்கர பாணியை சந்தித்து தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.

இதையடுத்து நத்தம் ஒன்றியத்தில் திமுக கவுன்சிலர் களின் பலம் 12 ஆகவும், அதிமுக 8 ஆகவும் உள்ளன. நத்தம் ஒன்றியத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திமுக முயற்சி மேற்கொண்டுள்ளது. அதிமுகவைச் சேர்ந்த ஒன்றியத் தலைவர் பதவி இழந்த பிறகு, விரைவில் திமுகவைச் சேர்ந்தவர் ஒன்றியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in