Published : 28 Jul 2023 04:13 AM
Last Updated : 28 Jul 2023 04:13 AM

மது அருந்த வரும் இளம் வயதினருக்கு ‘கவுன்சலிங்’ - அமைச்சர் முத்துசாமி தகவல்

ஈரோடு: மது அருந்த வரும் இளம் வயதினருக்கு ‘கவுன்சலிங்’ தர ஆலோசனைக் குழு அமைக்கப்பட உள்ளது, என வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.

ஈரோட்டில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் பேசியதாக வெளியான ஆடியோ தவறான ஆடியோ. இதுகுறித்து அவர் புகார் அளித்து, வழக்குப் பதிவு செய்துள்ளார். அவர் அப்படிப்பட்ட நபர் அல்ல. வேண்டுமென்றே இட்டுக்கட்டி அந்த ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. இது விசாரணையில் உள்ளது‌.

மது விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பது அரசின் நோக்கமல்ல. எந்த தவறும், பிரச்சினையும் இல்லாமல் மது விற்பனை செய்ய வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம். மதுப்பழக்கம் உள்ளவர்களை உரிய முறையில் அணுகி, அதிலிருந்து அவர்களை விடுவிப்பதற்கான முயற்சி் மேற்கொள்ளவும், மதுப் பழக்கத்தை அவர்களாகவே கைவிடும் வகையிலும் நடவடிக்கைகள் எடுக்க உள்ளோம்.

மது அருந்த வரும் இளம் வயதினருக்கு ‘கவுன்சலிங்’ தர ஆலோசனைக் குழு அமைக்கப்பட உள்ளது. விளைநிலங்களில் வீசப்படும் மது பாட்டில்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, விவசாயிகள் புகார்களை தெரிவித்துள்ளனர். இதற்கு மாற்றாக டெட்ரா பேக் மூலம் மது விற்பனை குறித்து ஆய்வு செய்து வருகிறோம். மற்ற மாநிலங்களில் உள்ளதையும் பார்த்து விட்டு, அதில் எது சிறந்ததோ அதை முடிவு செய்வோம். இவ்வாறு, அவர் கூறினார்.

13 ஆயிரம் மாணவர்களுக்கு சைக்கிள்: ஈரோட்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் மாணவ, மாணவியருக்கு விலை யில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி, ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. 1,012 மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.

அப்போது அவர் கூறும்போது, ‘மாவட்டத்தில் உள்ள 127 அரசு, மாநகராட்சி,அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 5,550 மாணவர்கள், 7,590 மாணவியர் என மொத்தம் 13 ஆயிரத்து 140 மாணவ, மாணவியருக்கு ரூ.6.33 கோடி மதிப்பிலான விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளன. இன்று முதல்கட்டமாக 1,000 பேருக்கு சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x