

திருச்சி: திருச்சியில் நேற்று தொடங்கிய வேளாண் சங்கமம் கண்காட்சிக்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் இதுபோன்ற கண்காட்சிகளை நடத்த திட்டமிட்டிருப்பதாக வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தமிழக அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வேளாண் சங்கமம்-2023 என்ற வேளாண் கண்காட்சி, திருச்சி கேர்கல்லூரி வளாகத்தில் நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சி வரும் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது. இக்கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
இந்தக் கண்காட்சியை பார்வையிட தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் திருச்சியில் திரண்டுள்ளனர். இந்தக் கண்காட்சி பயனுள்ள வகையில் இருப்பதாக விவசாயிகள் பலரும் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து, இது போன்ற கண்காட்சிகளை அனைத்து மாவட்டங்களிலும் நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: தமிழக அரசு வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு சிறுதானியங்கள் மீதான விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்துள்ளது. இன்றைய சூழலில் விவசாயத்துக்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளதால், விவசாயத்துக்கு தேவையான இயந்திரங்கள் குறித்து அறிந்து கொள்ள இந்த கண்காட்சி வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது.
வேளாண் உற்பத்திப் பொருட்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்வதால் விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும் என்பதால், அதற்குரிய தொழில் நுட்பங்கள், விற்பனை வாய்ப்புகள் குறித்தும், மக்களும் சிறுதானியங்கள், அவற்றின் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் குறித்து அறிந்து கொண்டு, அவற்றை பயன்படுத்தவும் இந்த கண்காட்சி பயனுள்ளதாக இருக்கும்.
விவசாயிகளுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேளாண் வல்லுநர்கள் கருத்துரை வழங்கவுள்ளனர். எனவே, விவசாயிகள், சிறுதொழில் முனைவோர், பொதுமக்கள் இந்த கண்காட்சியை பார்வையிட்டு பயன்பெற வேண்டும். தமிழகத்தில் முதன்முறையாக திருச்சியில் தொடங்கப்பட்ட இந்த கண்காட்சியை அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் பிற மாவட்டங்களிலும் நடத்த தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்றார்.