Published : 28 Jul 2023 04:00 AM
Last Updated : 28 Jul 2023 04:00 AM

திருச்சியில் 3 நாள் வேளாண் சங்கமம் தொடக்கம் - முதல் நாளில் 30,000 விவசாயிகள் பங்கேற்பு

திருச்சி: தமிழக அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில், வேளாண் சங்கமம் - 2023 என்ற கண்காட்சி திருச்சியில் நேற்று தொடங்கியது. தொடக்க நாளான நேற்று 30 ஆயிரம் விவசாயிகள் பங்கேற்றனர்.

திருச்சி கேர் கல்லூரி வளாகத்தில் 3 நாட்கள் நடைபெறும் வேளாண் சங்கமம்- 2023 என்ற கண்காட்சியை தமிழக முதல்வர்மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து, அரசுத் துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளைப் பார்வையிட்டார். 10 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கண்காட்சியில், 230 உள் அரங்குகள், 50 வெளி அரங்குகள் ஆகியவற்றில் அரசுத் துறைகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் உற்பத்திப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், தமிழ்நாடு தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் பல்வேறு விதை ரகங்கள், நுண்ணூட்ட உரங்கள், பழம் மற்றும் பூ மரக் கன்றுகள் உள்ளிட்டவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகம் சார்பில் கால்நடைகளுக்குத் தேவையான பசுந்தீவனங்கள், உலர் தீவனங்கள், மருந்துகள், கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் பல்வேறு நாட்டு இன மாடுகள், ஆடுகள், வெண்பன்றி, கோழி, முயல் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதுடன், அதன் வளர்ப்பு முறைகள், விற்பனை வாய்ப்புகள் ஆகியன குறித்தும் தொடர்புடைய துறை அலுவலர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.

இவை தவிர மாநிலம் முழுவதிலுமிருந்து உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனங்கள் சார்பில் நூற்றுக்கணக்கான அரங்குகளில் அவர்களது தயாரிப்புகளான நாட்டு காய்கறி விதைகள், மாடித் தோட்டத்துக்கான உபகரணங்கள், சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசிவகைகள் மற்றும் அவற்றால் தயாரிக்கப்பட்ட இனிப்பு மற்றும் கார வகைகள், தேயிலை தூள் உள்ளிட்டவை காட்சிப் படுத்தப்பட்டு, விற்பனையும் நடைபெறுகிறது.

நெல், கம்பு, சோளம், உயர்விளைச்சல் காய்கறி ரகங்களின்விதைகள், பூச்சிக் கொல்லி மருந்துகள், பயிர் ஊக்கிகள் ஆகியவற்றை தனியார் நிறுவனங்கள் காட்சிப்படுத்தியுள்ளன. குறிப்பாக, இன்றைய நவீன வேளாண்மைக்கு இன்றியமையாததாக உள்ள டிராக்டர்கள், உழவுக் கருவிகள், களை எடுக்கும் இயந்திரம்,

நாற்று நடும் இயந்திரம், அறுவடை இயந்திரம், கரும்பு வெட்டும் இயந்திரம், பவர் டில்லர்கள், சிறிய வகை டிராக்டர்கள், சொட்டு நீர்ப் பாசனக் கருவிகள், நீர்மூழ்கி மோட்டார்கள், வீடுகளிலேயே எண்ணெய் பிழியும் இயந்திரம், பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க பயன்படும் ட்ரோன்கள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கண்காட்சியின் முதல் நாளான நேற்று தமிழகம் முழுவதிலுமிருந்து வந்திருந்த 30 ஆயிரம் விவசாயிகள் பார்வையிட்டனர்.

கே.வி.இளங்கீரன்

கண்காட்சியைப் பார்வையிட்ட காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் கே.வி.இளங்கீரன் கூறியது: இன்றைய காலக்கட்டத்தில் விவசாயிகளுக்கு சாகுபடியில் நவீன இயந்திரங்களின் பயன்பாடு இன்றியமையாதது. என்னென்ன கருவிகள், இயந்திரங்கள் புதிதாக வந்துள்ளன.

அதற்குரிய அரசு மானியம் எவ்வளவு, கடனுதவி எவ்வளவு கிடைக்கும் என்பதையெல்லாம் விவசாயிகள் அறிந்து கொள்வதற்கு இந்த வேளாண் சங்கமம் கண்காட்சி பயனுள்ள வகையில் உள்ளது என்றார். இந்த கண்காட்சி இன்றும், நாளையும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x