Published : 28 Jul 2023 08:54 AM
Last Updated : 28 Jul 2023 08:54 AM

மின்சாரம் தாக்கி நெல்லை சிறுமி மரணம் - உறவினர்கள் மறியல்; போலீஸாருடன் தள்ளுமுள்ளு

திருநெல்வேலி: வண்ணார்ப்பேட்டையில் மாநகராட்சி மோட்டார் அறையில் மின்கசிவு காரணமாக 7 வயது சிறுமி உயிரிழந்த சம்பவத்தில் மாநகராட்சியைக் கண்டித்து, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி வண்ணார்ப்பேட்டை அம்பேத்கர் நகர் வடக்குத் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியைச் சேர்ந்த சக்திவேல் - சோனியா தம்பதியின் மகள் சத்யா உடையார்பட்டி பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் பள்ளிக்கு செல்லவில்லை.

தனது சகோதரனுடன் அப்பகுதியில் விளையாடிய சத்யா, கை கழுவ அங்குள்ள மாநகராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியுடன் கூடிய குழாய்க்கு சென்றுள்ளார். குழாயில் தண்ணீர் வராத நிலையில், அருகிலுள்ள மோட்டார் அறையின் சுவரில் பரவியிருந்த மின்கசிவு தாக்கி உயிரிழந்தார். சிறுமியின் உடலை அவர்களது உறவினர்கள் நேற்று பெற்றுக்கொள்ள மறுத்தனர்.

மோட்டார் அறையைப் பராமரிக்காத மாநகராட்சியின் அலட்சியத்தைக் கண்டித்தும், உரிய நிவாரணம் கேட்டும் திருநெல்வேலி - மதுரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து போலீஸார் அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது அவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அவர்களிடம், பாளையங்கோட்டை எம்.எல்.ஏ அப்துல் வகாப், மாநகராட்சி அதிகாரி கள் மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கைகள் தொடர்பாக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி தெரிவித்தனர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x