நெல்லை தீக்குளிப்பு சம்பவம்: தலைமை செயலர், தென்மண்டல ஐஜி பதில்மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

நெல்லை தீக்குளிப்பு சம்பவம்: தலைமை செயலர், தென்மண்டல ஐஜி பதில்மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

நெல்லை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் மெத்தனப்போக்கால்  இசக்கிமுத்துவின் குடும்பத்தினர் உயிரிழந்ததாகவும், அவர்கள் மீது  நடவடிக்கை கோரியும் தொடரப்பட்ட வழக்கு குறித்து தமிழக தலைமை செயலர், தென்மண்டல ஐஜி பதில்மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலியைச் சேர்ந்த செந்தில் குமார், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "கடந்த அக்டோபர் 23-ம் தேதி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கந்துவட்டி தொல்லை காரணமாக காசிதர்ம்ம் பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து, அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவம் நிகழ்வதற்கு முன்பாக கந்து வட்டி பிரச்சனை குறித்து இசக்கிமுத்து, தென்காசி அச்சன்புதூர் காவல்நிலையத்தில் புகார் அளித்து, நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார். ஆனால் காவல் ஆய்வாளர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

அதைத்தொடர்ந்து நெல்லை மாவட்ட ஆட்சியரிடமும், உரிய நடவடிக்கை கோரி 4 முறை மனு அளித்துள்ளார். மாவட்ட ஆட்சியரும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மனமுடைந்து போன இசக்கிமுத்து, கந்து வட்டி தொல்லையோடு, அதனால் குடும்பத்தை நடத்த இயலாத சிரமத்திற்குள் ஆளான நிலையில், குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதற்கு முழு காரணம் சரியான நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிய காவல்துறை மற்றும் நிர்வாகத்துறை அதிகாரிகளின் மெத்தனமான போக்கே. ஆகவே, தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி,  தமிழக தலைமை செயலர், தென்மண்டல காவல்துறை தலைவர் ஆகியோரிடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை.

ஆகவே மெத்தனப்போக்கால் ஒரு குடும்பத்தின் இழப்பிற்கு காரணமான தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மற்றும் நெல்லை மாவட்ட ஆட்சியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், அவர்களின் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்து, இசக்கிமுத்துவின் உறவினர்களுக்கு இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வேணுகோபால், அப்துல் குத்தூஸ் அமர்வு இது குறித்து தமிழக தலைமை செயலர், தென்மண்டல காவல்துறை தலைவர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in