கோயில் பணியாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்துக்கு தடை - உயர் நீதிமன்றம் உத்தரவு

கோயில் பணியாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்துக்கு தடை - உயர் நீதிமன்றம் உத்தரவு

Published on

மதுரை: கோயில் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் ஊதியம் வழங்கும் உத்தரவுக்கு உயர் நீதிமன்ற அமர்வு தடை விதித்துள்ளது.

நெல்லையைச் சேர்ந்த பெரியநம்பி நரசிம்ம கோபாலன் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "அம்பாசமுத்திரம் ராஜகோபால சுவாமி குலசேகர ஆழ்வார் கோயிலில் பணியாற்றும் அர்ச்சகர்கள், மணியம், உள்ளிட்டோருக்கு சமவேலைக்கு சம ஊதியம் வழங்கவும், குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின்படி ஊதியம் நிர்ணயம் செய்யவும் உத்தரவிட வேண்டும்" இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, கோயில் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் ஊதியம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதை எதிர்த்து அறநிலையத்துறை தரப்பில் மேல்முறையீடு செய்தது.

இதனை நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.

அறநிலையத்துறை தரப்பில் குறைந்தபட்ச ஊதியச் சட்டம் கோயில்களுக்கு பொருந்தாது. ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொரு நிறுவனம். அந்தந்த கோயிலின் வருமானத்தை பொறுத்தே அங்கு ஊதியம் நிர்ணயம் செய்யப்படும். அனைத்து கோவில் பணியாளர்களுக்கும் ஒரே சம்பளம் வழங்க முடியாது. சில கோயில்கள் நிதி சிக்கல்களை தீர்க்க கோயில் பணியாளர்கள் நல நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.

இதையேற்று தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்து விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in