

மதுரை: மதுரையில் மின்கம்பம் சரிந்து விளையாட்டு வீரரின் கால் முறிவு ஏற்பட்டது. புதிய கம்பம் மாற்றும்போது, இச்சம்பவம் நிகழ்ந்தது.
மதுரை கோச்சடை பகுதியைச் சேர்ந்தவர் தீர்த்தம். இவரது மகன் பரிதி விக்னேஸ்வரன் (19). இவர் கிணத்துக்கடவு பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கிறார். ஜூடோ விளையாட்டு வீரரான இவர் விடுமுறைக்கு ஊருக்கு வந்து இருந்தார். இன்னும் ஓரிரு வாரத்தில் தேசிய ஜூடோ போட்டியில் பங்கேற்கும் வகையில் தன்னை தயார்படுத்திக்கொண்டிருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அதே கோச்சடை பகுதியிலுள்ள தனது நண்பர் வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது, கோச்சடை முத்தையா கோயில் அருகே பழுதான மின்கம்பம் ஒன்றை கிரேன் மூலம் மாற்றியமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர். கம்பத்தில் மின் கம்பிகளை பொருத்தும் பணி நடந்தது. அப்போது எதிர்பாராத விதமாக பாரம் தாங்காமல் மின்கம்பம் கிரேனிலிருந்து சரிந்து விழுந்தது. அந்த நேரத்தில் சாலையில் நடந்து கொண்டிருந்த பரிதி விக்னேஷ்வரன் மீது விழுந்ததில் அவரது இடது காலில் முறிவு ஏற்பட்டு ரத்தம் கொட்டிய நிலையில் மயங்கினார்.
அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை இன்றி, அலட்சியமாக மின்கம்பம் மாற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டதால் இச்சம்பவம் நிகழ்ந்ததாக அப்பகுதியினர், மற்றும் மாணவரின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
மின்வாரிய அலுவலர் ஒருவர் கூறுகையில், ‘‘முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு தான் மின்கம்பம் மாற்றும் பணியில் ஈடுபட்டோம்’’ என்றனர்.
இது குறித்து தீர்த்தம் எஸ்எஸ்.காலனி போலீஸில் கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீஸார் கிரேன் ஆப்ரேட்டர் மற்றும் மின்வாரிய பணியாளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே, இந்த எதிர்பாராத சம்பவத்தில் காயம்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பரிதி விக்னேஸ்வரனின் கணுக்கால் அகற்றப்பட்டுள்ளது. தேசிய போட்டியில் கலந்துகொள்ளவிருந்த நிலையில் கால் அகற்றப்பட்டிருப்பது குறித்து மாணவன் பரிதி உருக்கமாக வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் கவனம் பெற்றுவருகிறது.