

குறுவை சிறப்புத் தொகுப்பு பெற அவகாசம் நீட்டிப்பு: ரூ.75 கோடி மதிப்பிலான குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டத்தை பெறுவதற்கான இறுதி நாள் ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திருச்சியில் வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் நடைபெற்ற “வேளாண் சங்கமம் 2023” மற்றும் விவசாயிகளுக்கு 50,000 கூடுதல் இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கும் விழாவில், அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அமலாக்கத் துறை இயக்குநர் பதவி நீட்டிப்புக்கு அனுமதி: மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று, அமலாக்கத் துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ரா செப்டம்பர் 15 வரை பதவியில் நீடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
அமலாக்கத் துறை அதிகாரம்: உச்ச நீதிமன்றத்தில் வாதம்: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்த நிலையில், அவரை விடுவிக்கக் கோரி அவருடைய மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீது உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி தரப்பிலும், அமலாக்கத் துறை தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கின் விசாரணையின் போது அமலாக்கத் துறையின் அதிகாரம் குறித்து மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கும் இடையில் காரசாரமான விவாதம் நடந்தது.
மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், "அமலாக்கத் துறைக்கு கைது செய்யும் அதிகாரம் இல்லை. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளது” என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை ஒருவரை கைது செய்ய அதிகாரம் இருக்கிறதுதானே? ஒருவரை கைது செய்வது, அவரிடமிருந்து அதிகமான தகவல்களைப் பெறுவதற்காகத்தான். எனவே, அத்தகைய கைதை தண்டனையாக பார்க்கக் கூடாது” என்றனர்.
அப்போது மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “புலனாய்வு அமைப்புகளின் விசாரணை தவறாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்த வழக்கின் தீர்ப்பு செந்தில் பாலாஜிக்கு எதிராகவோ, ஆதரவாகவோ வரலாம். ஆனால், இது அமலாக்கத் துறையின் அதிகாரம் சட்ட ரீதியாக தவறாக பயன்படுத்தப்படுகிறது" என்று வாதிட்டார்.
அதனைத் தொடர்ந்து வழக்கின் விசாரணையை வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி, நண்பகல் 12 மணிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
‘திமுக ஃபைல்ஸ்’ குறித்து அமைச்சர் சேகர்பாபு கருத்து: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிடும் ‘திமுக ஃபைல்ஸ்’ பார்ட் 10 வரைக்கும் போனாலும் கூட கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
இதனிடையே, திமுகவினர் மீதான 2-வது ஊழல் பட்டியல் வெளியிட்டபோது ஆளுநரிடம் தான் வழங்கிய இரும்புப் பெட்டியில் தமிழக அமைச்சர்கள் 6 பேரின் பினாமிகள் மற்றும் அவர்களின் சொத்துப் பட்டியல் உள்ளன என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விவரித்துள்ளார்.
தக்காளி விலை மீண்டும் அதிகரிப்பு: தமிழகத்தில் தக்காளி விலை மீண்டும் அதிகரித்துள்ளது. சென்னை - கோயம்பேடு சந்தையில் வியாழக்கிழமை தக்காளி விலை கிலோவுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.140-க்கு விற்பனையானது.
பிரதமர் மோடியின் விமர்சனமும், கெலாட்டின் பதிலடியும்: ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் "காங்கிரஸின் இருண்ட ரகசியங்களை ‘டெட் டைரி’ வெளிக்கொண்டு வரும்" என்று பிரதமர் மோடி தெரிவித்தார். பிரதமரின் இந்தக் கூற்றுக்கு எதிர்வினையாற்றிய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், "கற்பனையான ரெட் டைரியை பார்க்க முடிகிற பிரதமரால், சிவப்புத் தக்காளி, சிவப்பு சிலிண்டர் விலையுயர்வைப் பார்க்க முடியவில்லை” என்று பதிலடி கொடுத்துள்ளார்.
மணிப்பூர் செல்லும் 'இண்டியா' எம்.பி.க்கள் குழு: எதிர்கட்சிகளின் கூட்டணியான 'இண்டியா' சார்பில் எம்.பி.க்கள் குழு இரண்டு நாள் பயணமாக ஜூலை 29ம் தேதி மணிப்பூர் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருப்பு உடையில் நாடாளுமன்றம் வந்த இண்டியா எம்.பி.க்கள்: மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க வியாழக்கிழமை இண்டியா கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்துக்கு கருப்பு ஆடை அணிந்துவந்திருந்தனர்.
இதனிடையே, கடும் அமளிக்கு மத்தியில் மாநிலங்களவையில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், "எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதையும் கேட்க மறுப்பது அதிருப்தி அளிக்கிறது. இது நாட்டின் எந்த ஒரு சாதனையையும் அவர்கள் விமர்சிக்க மட்டுமே விரும்புகிறார்கள் என்பதையே காட்டுகிறது” என்றார்.
பிரபல ஓவியர் மாருதி காலமானார்: இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல ஓவியர் மாருதி வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 86.
இவரின் இயற்பெயர் ரங்கநாதன். மாருதி என்ற புனைப்பெயரில் பத்திரிகைகளில் ஓவியங்கள் வரைந்து அதன் மூலம் பிரபலமானவர். இவரின் கைவண்ணத்தில் உருவான ‘எண்ணிலடங்கா ஓவிய தேவதைகளுக்கு கணக்கில்லாத ரசிகர்களை உருவாக்கிக் கொண்டது இவரது தனித்துவம்’ என்பது குறிப்பிடத்தக்கது.
2019 முதல் 2021 வரை 10 லட்சம்+ பெண்கள் மாயம்: இந்தியாவில் கடந்த 2019 முதல் 2021 ஆம் ஆண்டு வரை மட்டும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள், 18 வயதுக்கு கீழ் உள்ள 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண் பிள்ளைகள் காணாமல் போனதாக தேசிய குற்ற ஆவணக் காப்பக தரவுகள் தெரிவிக்கின்றன.