

கரூர்: கரூர் மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்ற மேயர், துணை மேயர், மாமன்ற உறுப்பினர்களுக்கு முதல் மாத மதிப்பூதியம் வழங்கப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்க செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
கரூர் மாநகராட்சி சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் இன்று (ஜூலை 27ம் தேதி) நடைபெற்றது. மேயர் கவிதா தலைமை வகித்தார். துணை மேயர் ப.சரவணன், மாநகராட்சி ஆணையர் ந.ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தை நாளிதழ், தொலைக்காட்சி செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் புகைப்படம், வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர்.
மேயர் கவிதா: மாமன்ற மரபுகளை காக்கும் வகையில் கூட்டம் அமைதியாக நடைபெற செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு செய்தியாளர்களிடம் கேட்டுக்கொண்டார். இதையடுத்து செய்தியாளர்கள் அனைவரும் கூட்டரங்கை விட்டு வெளியேறியதும் கூட்டரங்கத்தின் கதவுகள் மூடப்பட்டு கூட்டம் நடைபெற்றது. சாதாரண கூட்டத்தில் 73, அவசரக் கூட்டத்தில் 32 என மொத்தம் 105 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கடந்த மாமன்ற கூட்டத்தின்போது அதிமுக, திமுக உறுப்பினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது திமுக மாமன்ற உறுப்பினர் ஒருவர் அதிமுக மாமன்ற உறுப்பினர்களை மைக்கால் தாக்குவது போல காண்பித்து விட்டு, ஆவேசமாக தாக்குவது போல அவர்கள் அருகே சென்ற வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியானதால் அவரது கடும் எதிர்ப்பு காரணமாக கூட்டத்தில் செய்தியாளர்கள் அனுமதிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
முன்னதாக, கூட்டத்தில் பங்கேற்ற மாமன்ற உறுப்பினர்களுக்கு ஜூலை மாதம் முதல் அரசு அறிவித்த ரூ.10,000 மதிப்பூதிய பட்டியல் ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டி தயாரிக்கப்பட்டு கூட்டத்துக்கு வந்த மாமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து பெற்றுக்கொண்டு அவர்களிடம் ரூ.10,000 மதிப்பூதியம் அடங்கிய கவர் வழங்கப்பட்டது. மேயர் கவிதா, துணை மேயர் ப.சரவணன் ஆகியோரிடமும் கூட்டரங்கில் மதியப்பூதிய பட்டியலில் கையெழுத்து பெறப்பட்டது.
அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் தினேஷ், சுரேஷ் உள்ளிட்ட திமுக, காங்கிரஸ், மா.கம்யூனிஸ்ட் உறுப்பினர் என அனைவரும் முதல் மாத மதிப்பூதியத்தை கூட்டரங்கில் பெற்றுக் கொண்டனர்.
அமர்வுப்படி நிறுத்தம்: கூட்டத்தில் பங்கேற்கும் மாமன்ற உறுப்பினர்களுக்கு அமர்வுப்படியாக ரூ.800 வழங்கப்பட்டு வந்தது. தற்போது மதிப்பூதியம் வழங்கப்படுவதால் அமர்வுப்படி நிறுத்தப்பட்டு விட்டது. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்தது, ''கூட்டம் நடைபெறும் நாளில் அனைவருக்கும் மதிப்பூதியம் வழங்கப்பட அறிவுறுத்தப்பட்டு உள்ளதால் கூட்டம் நடைபெறும் நாளில் மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்கப்படும்'' என்றனர்.