

தஞ்சாவூர்: தஞ்சாவூர் - நல்லிச்சேரியில் வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டியபோது பழங்காலத்து செப்பு நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன.
நல்லிச்சேரி அக்ரஹாரத்தெருவைச் சோ்ந்தவர் மார்க்கண்டேயர் மகன் பாலசுப்பிரமணியன் (87). இவர் பல ஆண்டுகளாக வெளி மாநிலத்தில் தங்கி, ரிலையன்ஸ் குழுமத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு சொந்தமான இடங்களை, அதே பகுதியில் வசிக்கும் அர்ச்சகரான சாமிநாதன் மகன் வெங்கடேஷ் (55) என்பவர் பராமரித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று பாலசுப்பிரமணியனுக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டுவதற்காக, அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன், சண்முகம் மற்றும் சிலர் பள்ளம் தோண்டினர். அப்போது பூமிக்கடியில் பித்தளையிலான பழங்காலத்துப் பெட்டி இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக அப்பகுதியினர் வருவாய்த் துறையினருக்கும், அய்யம்பேட்டை போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.
அந்தத் தகவலின் பேரில் அங்கு வந்த தஞ்சாவூர் வட்டாட்சியர் சக்திவேல், வருவாய் ஆய்வாளர் சரவணகுமார், கிராம நிர்வாக அலுவலர் தினகரன் மற்றும் போலீஸார், அந்த பெட்டியைத் திறந்து பார்த்தபோது, அதில் 100-க்கும் மேற்பட்ட பழங்காலத்துச் செப்பு நாணயங்கள் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து, அந்தப் பெட்டி மற்றும் காசுகளைப் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டு போலீஸரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.