

வேலூர்: ‘இந்து தமிழ் திசை’ செய்தி எதிரொலி யாக வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை பிரசவ வார்டு வளாகத்தில் தற்காலிகமாக கூடுதல் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு அங்குள்ள மரக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.
வேலூர் நகரின் மையப் பகுதியில் உள்ள பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை ரூ.100 கோடியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அங்கு புறநோயாளிகள் பிரிவுடன் மகப்பேறு, குழந்தைகள் நலம், எலும்பு முறிவு, காது, மூக்கு, தொண்டை, கண் சிகிச்சை பிரிவுகளுடன் 10-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், 20-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
பென்ட்லேண்ட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை பயன்பாட்டுக்கு வந்தால் வேலூரைச் சுற்றியுள்ள மக்களுக்கு பெரிய வரப்பிரசாதகமாக இருக்கும். ஏனென்றால், காட்பாடி மற்றும் வேலூரில் அரசு மருத்துவமனை எதுவும் இல்லாததால் நோயாளிகள் பலர் தனியார் மருத்துவ மனைகளையே நம்பியுள்ளனர்.
பென்ட்லேண்ட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டு வெளிப்பகுதியில் உள்ள இரண்டு ஹைமாஸ் விளக்கு எரியாததால் இருள் சூழ்ந்து காணப்படுவதுடன் அங்கு வரும் நோயாளிகள் மற்றும் உறவினர்கள் பெரிதும் அவதிக்குள்ளாவதாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது.
‘இருள் சூழ்ந்த மகப்பேறு பிரசவ வார்டு கட்டிடம்’ என்ற தலைப்பில் வெளியான செய்தியை தொடர்ந்து அங்குள்ள இரண்டு ஹைமாஸ் விளக்கு கம்பத்தில் தற்காலிகமாக மின் விளக்குகள் பொருத்தப்பட்டு எரிய வைக்கப்பட்டன. மேலும், பிரசவ வார்டு பகுதியில் தேங்கியிருந்த மரக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. இதனால், அந்த பகுதி வெளிச்சத்துடன் காட்சியளிப்பதாக நோயாளிகள் மற்றும் உறவினர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.