சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் வசதியின்றி பெண்கள் அவதி - கழிப்பறைகளை கட்ட கோரிக்கை

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் வசதியின்றி பெண்கள் அவதி - கழிப்பறைகளை கட்ட கோரிக்கை
Updated on
3 min read

சென்னை: சென்னையின் அடையாளங்களில் ஒன்றான உயர் நீதிமன்ற கட்டிடம் பாரிமுனையில் சுமார் 100 ஏக்கர் பரப்பில் இந்தோ - சார்சனிக் முறையில் கடந்த 1892-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த வளாகத்தில் 55-க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பகுதி தற்போது சி.ஆர்.பி.எப் போலீஸாரின் கட்டுப்பாட்டு வளையத்துக்குள் உள்ளது. இங்கு முதன்மை அமர்வு நீதிமன்றம், மாவட்ட அமர்வு நீதிமன்றங்கள், சிறு வழக்குகளுக்கான நீதிமன்றங்கள், குடும்ப நல நீதிமன்றங்கள், மகளிர் நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள், சி.பி.ஐ நீதிமன்றங்கள், தொழிலாளர் நல நீதிமன்றங்கள், போக்சோ வழக்குகளுக்கான நீதிமன்றங்கள் என 70-க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன.

<strong>ஏ. ரேஷ்மா</strong>
ஏ. ரேஷ்மா

இது தவிர வழக்கறிஞர்களுக்கான பழைய சேம்பர், புதிய சேம்பர், கூடுதல் சேம்பர், பெண் வழக்கறிஞர்களுக்கான சேம்பர், சட்ட அலுவலர்களுக்கான கட்டிடம், சமரச இசைவு தீர்ப்பாயம், காவல் கட்டுப்பாட்டு அறை, காவல் நிலையங்கள், ரயில்வே முன்பதிவு மையம், தீயணைப்பு நிலையம், தபால் அலுவலகம், இந்தியன் வங்கி, தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் ஆகியவையும் உயர் நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்டு வருகின்றன.

தற்போது சராசரியாக உயர் நீதிமன்றத்துக்கு வழக்கறிஞர்கள், பொதுமக்கள் என தினமும் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் வரையிலும், மாவட்ட நீதிமன்றத்துக்கு தினமும் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேர் வரையிலும் வந்து செல்கின்றனர். ஆண்களுக்கு நிகராக பெண் வழக்கறிஞர்களும், பெண் வழக்காடிகளும் அதிகமாக வருகின்றனர்.

தொடக்க காலகட்டங்களில் உயர் நீதிமன்றத்துக்கு வருகை தருவோரின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்பதால் கழிப்பறை வசதிகளும் குறைவாகவே இருந்தன. தற்போது வரும் மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உயர் நீதிமன்ற வளாகத்தில் போதுமான கழிப்பறை வசதி இல்லை. உயர் நீதிமன்றத்தின் தெற்கு பகுதியில் குடும்ப நல நீதிமன்றத்தின் அருகாமையில் ஒரே ஒரு கட்டண கழிவறை ரோட்டரி சங்கத்தினரின் உதவியால் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், அந்த கட்டணக் கழிவறை இருப்பதே பாதி பேருக்கு தெரிவதில்லை. அறிவிப்பு பலகை கூட இல்லை. இயற்கை உபாதைக்கு ஆளாகும் பெண்கள் கழிப்பறை எங்கே இருக்கிறது என்பதை மற்றவர்களிடம் கேட்க சங்கோஜப்பட்டு கழிப்பறையை தேடி அலையோ அலைகின்றனர்.

வழக்கறிஞர் ஏ. ரேஷ்மா: பெண் வழக்கறிஞர்களின் நிலைமையே பெரும் திண்டாட்டமாக உள்ளது என்றால், வழக்கு நிமித்தமாக வரும் பெண்களின் நிலைமையும், பணிபுரியும்

<strong>ஏ. மோகன்தாஸ்</strong>
ஏ. மோகன்தாஸ்

பெண் ஊழியர்களின் நிலைமையும் அதைவிட மோசமாக இருக்கிறது. பழைய வழக்கறிஞர்கள் சேம்பர், உயர் நீதிமன்றத்தின் உள்ளே 45, 46-ம் நீதிமன்ற அறைகள் உள்ள பகுதிகளில் போதுமான கழிப்பிட வசதி கிடையாது.

அங்கு மட்டுமின்றி, உயர் நீதிமன்றத்தின் ஆவின் கேட் பகுதியில் இருந்த பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு காலியாக உள்ளது. அந்த பகுதியில் இலவச கழிவறைகளை கட்டிக் கொடுத்தால் உதவிகரமாக இருக்கும். அத்துடன் பெண்களுக்கு ஏற்படும் தர்ம சங்கடத்தைப் போக்க ஆங்காங்கே ‘நாப்கின் வெண்டிங் மிஷின்’ களையும் வைக்க வேண்டும்.

பெண்களுக்கு அவசரமான சூழலில் வெளியே சென்று நாப்கின் வாங்கி வர வேண்டியுள்ளது. வரும்போது உயர் நீதிமன்ற நுழைவுவாயில்களில் நிற்கும் போலீஸாரின் விசாரணையில் வெளியே சென்று வந்ததற்கான காரணத்தை சொல்ல முடியாத நிலையில் பெண்கள் தர்மசங்கடத்தில் நெளிய வேண்டியுள்ளது.

வழக்கறிஞர் ஏ. மோகன்தாஸ்: சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சங்கங்களிலும் கூட கழிப்பறை வசதிகள் இல்லை. இதனால் இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் இருபாலரும் சிஆர்பிஎப் போலீஸாரின் மெட்டல் டிடெக்டர் பரிசோதனைகளைத் தாண்டி உயர் நீதிமன்றத்துக்குள் இருக்கும் கழிவறைகளை நோக்கி ஓட வேண்டியுள்ளது.

உயர் நீதிமன்றத்தின் வெளியே வழக்கறிஞர்கள் கேண்டீன், சட்ட அலுவலகம், வழக்கறிஞர்களுக்கான சேம்பர் போன்ற இடங்களில் கழிவறைகள் இருந்தாலும் அங்கு வெளி நபர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆவின் கேட், எம்பிஏ கேட், எஸ்பிளனேடு கேட், தெற்கு பகுதி கேட் என அனைத்து நுழைவாயில் பகுதிகளிலும் இலவச கழிப்பறைகளை கட்டிக் கொடுக்க வேண்டும். இதற்காக கையெழுத்து இயக்க மும் நடத்தவுள்ளோம்.

<strong>எம். ஜெய கிருபா</strong>
எம். ஜெய கிருபா

வழக்கறிஞர் எம். ஜெய கிருபா: உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் போதுமான கழிவறை வசதிகள் இல்லை என்பதால் சுற்றுச் சுவரை ஒட்டியுள்ள வெளிப்புற நடைபாதைகள் யாரும் நடமாட முடியாத அளவுக்கு சிறுநீர் கழிப்பிடமாக மாறிவிட்டது. இதனால் உயர் நீதிமன்றத்தில் இருந்து பார் கவுன்சிலுக்கு செல்பவர்கள் மூக்கைப் பொத்திக் கொண்டு

செல்ல வேண்டியுள்ளது.

அவ்வழியே பெண்கள் நடந்து செல்லவே தர்ம சங்கடத்துக்கு ஆளாகின்றனர். நீதிமன்றத்தின் வெளியே உள்ள கழிவுநீர் கால்வாய்களை சரி செய்து, சிறுநீர் கழிப்பிடமாக உள்ள பகுதிகளை பூந்தொட்டிகள் வைத்து அலங்கரிக்க ஏற்கெனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவு இன்று வரை அமல்படுத்தவில்லை. நீதிமன்றத்தின் உள்ளே போதிய எண்ணிக்கையில் இலவச கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த தலைமை நீதிபதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது தொடர்பாக உயர் நீதிமன்ற அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘உயர் நீதிமன்றத்தின் வெளியே போதிய எண்ணிக்கையில் கழிப்பிடம் கட்டுவதற்கான திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. விரைவில் அதற்கான ஒப்புதல் பெறப்பட்டு பணிகள் தொடங்கும் என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in