1950-ம் ஆண்டு முதல் வில்லங்க சான்றுகளை பார்வையிடும் வசதி: பதிவேடுகளை பதிவேற்றும் பணி ரூ.36.58 கோடியில் தொடக்கம்

1950-ம் ஆண்டு முதல் வில்லங்க சான்றுகளை பார்வையிடும் வசதி: பதிவேடுகளை பதிவேற்றும் பணி ரூ.36.58 கோடியில் தொடக்கம்

Published on

சென்னை: பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியால் பதிவுத்துறையில் முன்னோடி திட்டமாக கடந்த 2000-ம் ஆண்டு பிப்.6-ம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்டார் திட்டம் கடந்த 2018-ம் ஆண்டு முதல் புதிய பரிணாமத்தில் ஸ்டார் 2.0 என்ற திட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதன் மூலம் பதிவுத்துறையில் அனைத்து சேவைகளும் இணையதளம் வாயிலாக வழங்கப்பட்டு வருகின்றன.

கடந்த 1975-ம் ஆண்டு முதல் தற்போது வரையிலான காலத்துக்குரிய அட்டவணை-2 பதிவேடுகள் கணினிமயமாக்கப்பட்டு வில்லங்க சான்றுகளை பொதுமக்கள் இணையவழியில் பதிவிறக்கம் செய்து வருகின்றனர்.

அரசாணை வெளியீடு: இந்நிலையில், 2021-22-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இந்த வசதி, கடந்த 1950-ம் ஆண்டு ஜன 1 முதல் பதியப்பட்ட அனைத்து ஆவணங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி கடந்த 1950 ஜனவரி 1 முதல் 1974 டிச.31 வரையிலான காலத்துக்குரிய வில்லங்கச் சான்றுகளை இணைய வழியில் பொதுமக்கள் பார்வையிடவும், பதிவிறக்கம் செய்ய ஏதுவாகவும் இந்த காலகட்டத்துக்கான அட்டவணை-2 பதிவேடுகளை ரூ.36.58 கோடி மதிப்பீட்டில் கணினியில் பதிவேற்றம் செய்வதற்கு நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடுஅளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணிகள் முடிவடைந்ததும் கடந்த 1950 முதல் இன்றைய நாள் வரையிலான வில்லங்க சான்றுகளை பொதுமக்கள் இணையதள வாயிலாக பார்வையிடவும், அதன் பிரதிகளை கட்டணம் ஏதுமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளவும் இயலும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in