Published : 17 Nov 2017 10:29 AM
Last Updated : 17 Nov 2017 10:29 AM

ராமேசுவரம் மீனவர் வேலைநிறுத்தம் வாபஸ்: சங்க தலைவர்களின் அறிவிப்புக்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு

ராமேசுவரம் மீனவர்கள் மீதான இந்திய கடலோரப் படையினரின் துப்பாக்கிச் சூட்டை கண்டித்து நடைபெற்று வந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை மீனவச் சங்கத் தலைவர்கள் வாபஸ் பெற்றுள்ளனர். தங்களிடம் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக வாபஸ் அறிவிப்பை வெளியிட்டதாகக் கூறி, அவர்கள் மீது மீனவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து பாம்பனைச் சேர்ந்த ஜெபமாலை என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் கடந்த 13-ம் தேதி மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். தனுஷ்கோடி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ரோந்து வந்த இந்திய கடலோரக் காவல் படையினர் மீனவர்களின் படகை நோக்கிச் சுட்டனர். விசைப்படகில் இருந்த பிச்சை ஆரோக்கியதாஸ், ஜான்சன் ஆகியோர் காயமடைந்தனர். இருவரும் ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக கடந்த 14-ம் தேதி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் அவசர கூட்டம் நடத்தப்பட்டு வேலைநிறுத்தப் போராட்டமும், கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து இந்திய கடலோர காவல்படையினர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனினும், துப்பாக்கிச் சூடு நடத்திய வீரர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் கடந்த 15-ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, கடலோரப் படையினரின் வழக்கமான மாதாந்திர கூட்டத்தில் மீனவர்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இதில், துப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றி இருதரப்பிலும் கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

அதைத்தொடர்ந்து, மண்டபம் கடலோரக் காவல்படை இணை கமாண்டர் ஆங்கூர், உதவி கமாண்டர் ராஜூசங்கர் ஆகியோர் ராமேசுவரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் இருவரையும் சந்தித்து கடலில் நடந்த சம்பவத்தை கேட்டறிந்து ஆறுதல் கூறினர்.

திடீர் அறிவிப்பால் அதிர்ச்சி

மண்டபம் கடலோரக் காவல்படையினர் மீனவர்களை சந்தித்த சில மணி நேரங்களில், இந்தியக் கடலோரக் காவல் படையினரைக் கண்டித்து நேற்று நடத்துவதாக அறிவிக்கப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டம், தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் ஆகியவற்றை வாபஸ் பெறுவதாக மீனவத் தலைவர்கள் திடீரென அறிவித்துள்ளனர்.

மீனவர்கள் மீதான இந்திய கடலோரக் காவல்படையினரின் தாக்குதலுக்கு கடும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என மீனவர்கள் முடிவு செய்திருந்தனர். இந்நிலையில், முறையாக கூட்டம் நடத்தி முடிவு எடுக்காமல், ராமேசுவரம் மீனவ சங்கத் தலைவர்கள் தன்னிச்சையாக போராட்டத்தை வாபஸ் பெற்றிருப்பது மீனவர்களிடையே அதிர்ச்சியையும், மீனவப் பிரதிநிதிகள் மீது கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மீனவப் பிரதிநிதிகளை செல்போனில் தொடர்புகொண்ட மீனவர்கள் பலர் தங்களின் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x