

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் போல உடையணிந்தபடி உறங்கிக் கொண்டிருந்த இளைஞரை கன்டோன்மென்ட் காவல் நிலைய போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்(24). இவருக்கு சிறுவயதிலேயே காவல் துறையில் சேர்ந்து மிடுக்காக பணியாற்ற வேண்டும் என்கிற ஆசை இருந்திருக்கிறது. ஆனால், பத்தாம் வகுப்பு கூட தேர்ச்சி பெற இயலாததால் வினோத்தின் காவலர் கனவு கலைந்தது.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்துக்குச் சென்று தனது அம்மா, அப்பா ஆகியோருடன் செங்கல் சூளையில் வேலை செய்து பிழைத்து வந்த வினோத்துக்கு கையில் சிறிது காசு புழங்க ஆரம்பித்ததும் காவலர் போல உடையணிந்து கம்பீரமாக வலம் வர வேண்டும் என்கிற எண்ணம் துளிர்த்திருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு கோவைக்குச் சென்று போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளர் சீருடை வாங்கிய வினோத், அந்த உடையை அணிந்துகொண்டு பேருந்தில் பயணித்து தனது சொந்த ஊரான ஆண்டிமடம் சென்றுள்ளார். அங்கு இரு தினங்கள் தங்கியிருந்து விட்டு மீண்டும் ஈரோடு செல்ல புதன்கிழமை நள்ளிரவு திருச்சி வந்துள்ளார். தூக்கம் வரவே திருச்சி மத்திய பேருந்து நிலைய நடைபாதையில் படுத்து தூங்கிவிட்டார்.
அங்கு ரோந்து சென்ற குற்றப்பிரிவு காவலர்கள் வினோத்தை எழுப்பி விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவிக்கவே கன்டோன்மென்ட் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை செய்தனர். அப்போது வினோத், உதவி ஆய்வாளர் வேடத்தில் ஊர் சுற்றியது தெரியவந்தது.
கன்டோன்மென்ட் காவல் நிலைய போலீஸார் வினோத் மீது உதவி ஆய்வாளர் வேடத்தில் போலியாக திரிந்த குற்றத்துக்காக வழக்கு பதிவு செய்து சிறையிலடைத்தனர்.