

சென்னை: இந்தியாவின் மிக நீளமான கடற்கரையாகவும், உலகின் 2-வது நீளமான கடற்கரையாகவும் விளங்குவது சென்னை மெரினா. மக்களுக்கு செலவு குறைந்த, குழந்தைகள் அதிகம் விரும்பும் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு தலமாக மெரினா கடற்கரை உள்ளது. இங்கு மீன் உணவு, கலை பொருட்கள், குதிரை சவாரி போன்றவை முக்கிய பொழுதுபோக்கு அம்சங்களாக உள்ளன.
இங்கு காலை, மாலையில் ஏராளமானோர் நடைபயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்கின்றனர். மெரினாவுக்கு தினமும் குறைந்தபட்சம் 5 ஆயிரம் பேரும், விடுமுறை நாட்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் வந்து செல்கின்றனர்.
இதை கருத்தில் கொண்டு, இங்கு குடிநீர், கழிப்பறை ஆகிய அடிப்படை வசதிகளை மேம்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள கழிப்பறைகளை சீரமைக்க ஏற்கெனவே சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன.
மெரினாவில் உழைப்பாளர் சிலை, சுபாஷ் சந்திரபோஸ் சிலை, 8-ம் எண் பூங்கா பின்புறம், மாற்றுத் திறனாளிகள் நடைபாதை எதிரே என 4 இடங்களில் குடிநீர் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை சீரமைத்து, ஓராண்டு காலம் பராமரிக்க மாநகராட்சி சார்பில் ரூ.23 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ள நிலையில், விரைவில் பணிகள் தொடங்க இருப்பதாக மாநகராட்சி கூறியுள்ளது.