

சென்னை: சென்னை-கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் எண்ணூர் ரயில் நிலையம் அருகே உயர்நிலை மின் பாதையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால், மின்சார ரயில் சேவை மூன்றரை மணி நேரம்பாதிக்கப்பட்டது. இதனால், அலுவலகம் செல்வோர், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இதற்கிடையில், ரயில் சேவையில் ஏற்பட்ட பாதிப்புகளைக் கண்டித்து, பொன்னேரி ரயில் நிலையத்தில் பயணிகள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை ரயில்வே கோட்டத்தில் முக்கிய வழித்தடங்களில் ஒன்றாக சென்னை-கும்மிடிப்பூண்டி வழித்தடம் உள்ளது. இந்த வழித்தடத்தில் தினமும் 80-க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.
வேலை, படிப்புக்காக பல்லாயிரக்கணக்கானோர் இந்த வழித்தடத்தில் இயங்கும் மின்சார ரயில்களில் தினமும் சென்னைக்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை 6.30 மணியளவில், எண்ணூர் ரயில் நிலையம் அருகே உயர்நிலை மின் பாதையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, சூலூர்பேட்டையில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்பட்ட மின்சார ரயில் எண்ணூர் ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டது. மேலும், கும்மிடிப்பூண்டி- சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்பட்ட மின்சார ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால், பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள், அலுவலகம் செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
30 நிமிடங்களுக்கு ஒரு ரயில்: பின்னர், உயர்நிலை மின் பாதையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு, காலை 9 மணிக்கு ரயில் போக்குவரத்து இயல்பு நிலைக்குதிரும்பியது. எனினும், மின்சார ரயில்கள் தாமதமாக இயங்கியதால், பயணிகள் சிரமத்துக்கு உள்ளானார்கள்.
இதுகுறித்து ரயில் பயணிகள் கூறும்போது, “சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில், மக்கள் அதிகம் பயமிக்கும் நேரங்களில் 30 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது. மேலும், இந்த ரயில்கள் தாமதமாகவே சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடைகின்றன.
இந்நிலையில், தொழில்நுட்பக் கோளாறால் பல ரயில்களின் சேவை பாதித்தது. நாங்கள் சென்ற மின்சார ரயில் மெதுவாக நகர்ந்து, நண்பகல் 12 மணிக்குத்தான் சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடைந்தது. இதனால், பணிக்கு மிகவும் தாமதமாகச் சென்றோம். பள்ளி, கல்லூரி மாணவர்களும் பாதிக்கப்பட்டனர். எனவே, இந்த வழித்தடத்தில் ரயில் சேவையை மேம்படுத்த ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
இதற்கிடையில், சென்னை சென்ட்ரல் நிலையத்துக்குச் செல்லும் மின்சார ரயில் பொன்னேரி ரயில் நிலையம் வந்தபோது, அது சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் மேலும் தாமதம் ஏற்படும் எனக் கூறி, பயணிகள் பொன்னேரி ரயில் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், பொன்னேரியில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு மின்சார ரயில் இயக்கப்பட்டது.