

சென்னை: கொசஸ்தலை ஆற்றில் உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, எண்ணூர் மீனவர்கள் படகில் சென்று முற்றுகைப் போராட்டம் நடத்தினார்.
வடசென்னை அனல்மின் நிலையம் எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் உயர் மின் கோபுரத்தை அமைத்து வருகிறது. ஆறும், கடலும் சங்கமிக்கும் அந்த இடம் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் பகுதியாகும். அங்கு எண்ணூர் பகுதியைச் சேர்ந்த சின்னக் குப்பம், பெரிய குப்பம், காட்டுக்குப்பம், தாழங்குப்பம் உள்ளிட்ட 6 மீனவ கிராம மக்கள் மீன்பிடித்து வருகின்றனர்.
இங்கு, உயர் மின் கோபுரம் அமைக்கப்பட்டால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி, 40 படகுகளில் மீனவர்கள் சென்று உயர்மின் கோபுரம் அமைக்கும் பணியை நேற்று தடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து பொன்னேரி வட்டாட்சியர் செல்வகுமார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, இப்பிரச்சினை தொடர்பாக கடந்த முறை ஆட்சியரிடம் நேரில் அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை ஆட்சியரிடம் அழைத்து செல்லப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என மீனவர்கள் குற்றம்சாட்டினர்.
அதற்கு வட்டாட்சியர், இன்னும் 2 நாட்களுக்குள் ஆட்சியரிடம் அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்துவதாக உறுதி அளித்தார். இதையடுத்து, மீனவர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.