Published : 27 Jul 2023 04:03 AM
Last Updated : 27 Jul 2023 04:03 AM
சிவகங்கை: காளையார்கோவில் அருகே கூட்டுறவு சங்கத்தில் கொள்ளை போன 400 பவுன் நகைகளுக்கு 8 ஆண்டுகளாக இழப்பீடு வழங்காத நிலையில், மீட்கப்பட்ட நகைகளையும் வழங்காமல் இழுத்தடித்து வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே அதப்படக்கி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் 111 விவசாயிகள் 400 பவுன் நகைகளை அடகு வைத்திருந்தனர். 2015 மே 2-ம் தேதி நகைகள் கொள்ளை போயின. அதே ஆண்டு செப்டம்பரில் கொள்ளையர்களை பிடித்து 150 பவுன் நகைகளை போலீஸார் மீட்டனர். ஆனால் நகைகளை அடையாளம் காண முடியாதபடி உருக்கப்பட்டிருந்தன.
இதனால் அடகு வைத்த விவசாயிகளிடம் நகைகளை ஒப்படைப்பதில் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து நகைகளை ஏலம் விட்டும், காப்பீடு மூலமாக இழப்பீடு பெற்றும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 8 ஆண்டுகளாகியும் இதுவரை இழப்பீடும் தரவில்லை. மீட்கப் பட்ட நகைகளை ஏலம் விடவும் இல்லை.
இது குறித்து விவசாயிகள் சங்க பிரதிநிதி கோபால் கூறுகையில், அடகு வைத்த விவசாயிகள், இழப்பீடு கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் நகை கொள்ளை போனதில் இருந்து அதப்படக்கி கூட்டுறவுச் சங்கமும் முறையாக செயல்படவில்லை. நிரந்தரமாக செயலர்களை நியமித்து மீண்டும் கூட்டுறவுச் சங்கத்தை முழுமையாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜீனு கூறு கையில், நீதிமன்றம் அனுமதி பெற்று மீட்கப்பட்ட நகைகள் ஏலம் விடப்படும். சங்கத்துக்கு நிரந்தரச் செயலர் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT