

நடிகர் கமல்ஹாசனின் ட்வீட்களை புரிந்துகொள்ள கோனார் உரை தேவை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
நட்சத்திர ஓட்டல்கள் தவிர அனைத்து ஓட்டல்களுக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது கடந்த 15-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. ஆனாலும் சில உணவகங்களில் பழைய ஜிஎஸ்டி முறையே அமலில் இருப்பதாக பரவலாக புகார்கள் வெளியாகின.
இந்நிலையில், இன்று (திங்கள்கிழமை) காலை சென்னை தி.நகரில் உள்ள ஓர் உணவகத்தில் காலை சிற்றுண்டியை சாப்பிட்ட தமிழிசை சவுந்தரராஜன், உணவக விலைப் பட்டியலில் ஜிஎஸ்டி எவ்வாறு கணக்கிடப்படுகிறது என நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, "கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் புரியாதது போலவே கருத்துகளை பதிவிடுகிறார். கமலின் ட்வீட்களை புரிந்துகொள்ள கோனார் உரை வெளியானால் நன்றாக இருக்கும்" என்றார்.
நடிகர் கமல்ஹாசன் பதிவு செய்யும் ட்வீட்கள் இதுவரை சமூக வலைதளங்களில் கேலி செய்யப்பட்டுவந்த நிலையில் தற்போது தமிழக அரசியல் தலைவர் ஒருவரும் கிண்டல் செய்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.’