பெண்ணுக்கு ஆபாச இ-மெயில்: இளைஞருக்கு ஜாமீன் மறுப்பு

பெண்ணுக்கு ஆபாச இ-மெயில்: இளைஞருக்கு ஜாமீன் மறுப்பு
Updated on
1 min read

திருவல்லிக்கேணியைச் சேர்ந்த இளைஞர் குவைத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். அதே நிறு வனத்தில் தன்னுடன் பணியாற்றிய மும்பை பெண்ணை அவர் காதலித்ததாகவும், ஆனால் அவரது காதலை ஏற்றுக் கொள்ள அந்தப் பெண் மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

எனினும் அந்தப் பெண்ணுக்கு திருவல்லிக்கேணி இளைஞர் தொடர்ந்து தொந்தரவு அளித்த தாகவும், அதனால் தனியார் நிறு வனத்திலிருந்து பணி நீக்கம் செய் யப்பட்ட அவர், இந்தியா திரும்பி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்தியா திரும்பிய பிறகும், சென்னையிலிருந்து அந்தப் பெண்ணுக்கு ஆபாசமான இ-மெயில்கள் மற்றும் மோசமான படங்களை அவர் அனுப்பி வந்ததாக புகார் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக குவைத்தில் உள்ள அந்த தனியார் நிறுவனத்தின் சி.இ.ஓ. அங்கு காவல் துறையினரிடம் புகார் அளித்தார். அந்தப் புகாரை சென்னை சைபர் கிரைம் போலீஸாருக்கு குவைத் போலீஸார் அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து திருவல்லிக் கேணி இளைஞர் கைது செய்யப்பட்டு, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் தன்னை ஜாமீனில் விடுவிக்கக்கோரி அந்த இளைஞர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி பி.தேவதாஸ் உத்தரவிட்டுள்ளார்.

குவைத்தில் தன்னுடன் பணியாற்றிய பெண்ணுக்கு மனுதாரர் தொந்தரவு அளித்துள்ளார். விருப்பமில்லாத பெண்ணை திருமணத்துக்கு கட்டாயப்படுத்த முடியாது. வேலையை இழந்து நாடு திரும்பிய இளைஞர், அதன் பிறகும், ஆபாசமான இ-மெயில்களை அந்தப் பெண்ணுக்கு அனுப்பி, அந்தப் பெண்ணை பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளார். இதற்கான ஆதாரங்களை போலீஸார் திரட்டியுள்ளனர்.

புலன் விசாரணை நடந்து வரும் சூழலில் மனுதாரரை ஜாமீனில் விடுதலை செய்ய இயலாது என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in