வெண்புள்ளிகளுக்கு இலவச சித்த மருத்துவம்: தாம்பரத்தில் வரும் 12-ம் தேதி நடைபெறுகிறது

வெண்புள்ளிகளுக்கு இலவச சித்த மருத்துவம்: தாம்பரத்தில் வரும் 12-ம் தேதி நடைபெறுகிறது
Updated on
1 min read

வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வரும் 12-ம் தேதி கிழக்கு தாம்பரத்தில் இலவச சித்த மருத்துவம் அளிக்கப்படு கிறது.

இதுதொடர்பாக வெண்புள்ளி கள் விழிப்புணர்வு இயக்கத்தின் செயலாளர் கே.உமாபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத் திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் மற்றும் வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கமும் இணைந்து வெண்புள்ளிகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சையை தொடர்ந்து வழங்கி வருகின்றன. விட்டிலைகோ, லூக்கோடெர்மா எனப்படும் வெண்புள்ளிகள் தோலில் ஆங்காங்கே, திட்டுத் திட்டாகவோ அல்லது புள்ளிகளாகவோ காணப்படும். வெண்புள்ளிகள் நோயல்ல; பிறருக்குத் தொற்றும் தன்மை கொண்டதல்ல; எனினும் இதற்கு எதிரான கருத்துகள் சமூகத்தில் பலவாறு நிலவி வருகின்றன.

நம் நாட்டில் மொத்தம் 6 கோடி பேர் வெண்புள்ளிகள் இருப்பவர்களாக இருக்கின்றனர். இதில், தமிழகத்தில் 37 லட்சம் பேர் உள்ளனர். வெண்புள்ளிகளால் உடல் நலத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றாலும், உளவியல் ரீதியான பிரச்சினையால் பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், வெண்புள்ளி கள் இருப்போருக்கு கிழக்கு தாம்பரத்தில் உள்ள தேசிய கரோடியா மேல்நிலைப் பள்ளியில் வரும் 12-ம் தேதி இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவ முகாமை மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் டைரக்டர் ஜெனரல் பேராசிரியர் டாக்டர் ஆர்.எஸ்.ராமசாமி தொடங்கி வைக்கிறார்.

மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் மருந்துகள் வழங்கப்படவுள்ளன. வெண்புள்ளிகள் இருப்பவர்கள் 044-22265507 / 22265508 ஆகிய தொலைபேசி எண்களிலோ அல்லது 9840052464 என்ற செல்போன் எண்ணிலோ தொடர்பு கொண்டு தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in