

குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் ஐயப்பன் கோயில் சாலையில் தனியார் மருத்துவமனை உள்ளது.
இங்கு நேற்று இரவு 11.53 மணிக்கு குன்னூர் பாரஸ்டேல் பகுதியைச் சேர்ந்த நீதிமன்ற ஊழியர் சந்தோஷ், தனது மனைவி லீனாவை பிரசவத்துக்காக அனுமதித்துள்ளார்.
லீனாவுக்கு நள்ளிரவு 12.20 மணிக்கு குழந்தை பிறந்துள்ளது. சிறிது நேரத்தில் குழந்தை உயிரிழந்துள்ளது. இந்நிலையில், மருத்துவமனையின் அலட்சியத்தால் குழந்தை இறந்ததாக கூறி, நேற்று மதியம் மூன்று மணி வரை குழந்தையின் உடலை வாங்காமல் மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து, காவல் துணைக் கண்காணிப்பாளர் குமார் தலைமையிலான காவல் துறையினர், குழந்தையின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர், பிறந்த குழந்தையை பிரேத பரிசோதனை செய்ய உறவினர்களில் பெரும்பாலானவர்கள் விரும்பாததால், வழக்கு பதிய வேண்டாம் என்று கூறி உடலைப் பெற்றுச் சென்றனர்.