

ஓசூர்: அனுமதியின்றி தக்காளி தோட்டங்களுக்கு மின்வேலி அமைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தேன்கனிக்கோட்டை வனச்சரகம் எச்சரித்துள்ளது.
கர்நாடக மாநிலத்திலிருந்து கடந்தாண்டு வலசை வந்த 200 யானைகளில் 100 யானைகள் தேன்கனிக்கோட்டை, தளி, ஜவளகிரி ஆகிய வனப் பகுதியில் நிரந்தரமாக முகாமிட்டுள்ளன. இதில் 10-க்கும் மேற்பட்ட யானைகள் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தேன்கனிக்கோட்டை அருகே திம்ம சந்திரம் காப்புக் காட்டிலிருந்து வெளியேறி வனத்தையொட்டியுள்ள கிராமங்களில் உள்ள தக்காளி, வெள்ளரிக்காய், வாழை உள்ளிட்ட தோட்டங்களில் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தி வருகின்றன.
இதையடுத்து, வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு, யானைகள் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனர். இதனிடையே, தற்போது தக்காளி விலை உயர்வால் சில விவசாயிகள் தக்காளி தோட்டங்களில் வனவிலங்குகள் செல்வதைத் தடுக்க அனுமதியின்றி மின்வேலி அமைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக தேன்கனிக்கோட்டை வனச்சரக ஊழியர்கள் கூறியதாவது: கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தேன்கனிக்கோட்டை அருகே விளை நிலங்களில் யானைகள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தியுள்ளன. மீண்டும் விளை நிலங்களுக்குள் வராமல் இருக்கத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். சில விவசாயிகள் தக்காளி தோட்டங்களில் அனுமதியின்றி மின்வேலி அமைத்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
இதனால், யானைகள் மட்டும் அல்லாமல் மனிதர்களும் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. தோட்டங்களில் மின்வேலி அமைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால் மின்வேலி அமைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். விளை நிலங்களுக்குள் யானைகள் வந்தால், வனத்துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.