

தருமபுரி: தருமபுரி ஆட்சியர் அலுவலகம் அருகே ராமன் நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றப்பட்டதால் சகதியான சாலையில் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் நேற்று நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தருமபுரி ஆட்சியர் அலுவலகம் அருகே வெங்கட்டம்பட்டி சாலையில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், அந்த சாலை வழியாக நூல அள்ளி, எட்டிமரத்துப்பட்டி, ராஜாதோப்பு, வெங்கட்டம்பட்டி, வத்தல்மலை உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் போக்குவரத்து முழுவரும் அருகிலுள்ள ராமன் நகர் பகுதி வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், ஏற்கெனவே சிதிலமடைந்து கிடந்த மண் சாலை, அதிக போக்குவரத்தால் சேறும், சகதியுமாக மாறி நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு வாசிகள் வெளியில் செல்ல கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்வோர் வழுக்கி விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது.
இதனால் ஆத்திரமடைந்த இப்பகுதி குடியிருப்புவாசிகள் நேற்று ராமன் நகர் பகுதியில் மறியலில் ஈடுபட்டு நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த உள்ளாட்சி அமைப்பைச் சேர்ந்தவர்கள் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தி சாலை பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு ஏற்படுத்துவதாகக் கூறியதைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.