

மாதச் சம்பளதாரர்கள் தங்களது வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யும் பணி திங்கள் கிழமை (ஜூலை 28) முதல் தொடங்கவுள்ளது. இதற்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் 33 சிறப்பு கவுன்ட்டர்கள் திறக்கப் பட்டுள்ளன.
ஆண்டுக்கு ரூ.2 லட்சத்துக்கு மேல் ஊதியம் பெறுவோர்கள், ஒரு கோடி ரூபாய்க்கு கீழ் மொத்த வருவாய் உள்ளவர்கள் மற்றும் கம்பெனி அல்லாத வரி செலுத்து பவர்கள் ஆகியோர்களுக்கு ஜூலை 28, 30, 31 ஆகிய தேதி களில் வருமான வரி தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
29-ம் தேதி ரம்ஜான் பண்டிகை என்பதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காலை 9.30 மணியில் இருந்து 5.30 மணி வரை வருமான வரி தாக்கல் செய்யலாம். வருமான வரி செலுத்துபவர்களுக்கு 33 சிறப்பு கவுன்ட்டர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கவுன்ட்டர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்கு மேல் ஊதியம் பெறுபவர்கள் ஆன்லைன் மூலமாகத்தான் வருமான வரி செலுத்த வேண்டும். முதல் முறையாக வருமான வரி செலுத்துபவர்களுக்கு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. வருமான வரி தாக்கல் செய்யும் பணியில் வருமான வரி அலுவலகத்தைச் சேர்ந்த சுமார் 150 ஊழியர்கள் ஈடுபடவுள்ளனர்.
கடந்த ஆண்டு 5.65 லட்சம் மாதச் சம்பளதாரர்கள் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர். இவர்களில் 55 ஆயிரம் பேர் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை தலைமை அலுவலகத்தில் கணக்கைத் தாக்கல் செய்தனர்.
எனவே, இந்த ஆண்டும் ஏராளமானோர் தங்களது கணக்கைத் தாக்கல் செய்ய வருவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.