தொழில்நுட்ப கோளாறால் முடங்கிய ஐஆர்சிடிசி இணையதளம்: டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் சிரமப்பட்ட பயணிகள்

தொழில்நுட்ப கோளாறால் முடங்கிய ஐஆர்சிடிசி இணையதளம்: டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் சிரமப்பட்ட பயணிகள்
Updated on
1 min read

சென்னை: ஐஆர்சிடிசி இணையதளத்தில் நேற்று திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு பல மணிநேரமாக முடங்கியது. இதனால், டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட சேவை பெற முடியாமல் பயணிகள் சிரமப்பட்டனர்.

இன்றைய காலத்தில் மக்களிடம் மொபைல்போன், கணினி பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால், இணையதளம், செயலி வழியாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, 82 சதவீதத்துக்கும் மேற்பட்டோர், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான ஐஆர்சிடிசி இணையதளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். இருப்பினும், சர்வர் தரம் உயர்த்தப்படாததால், இந்த இணையதளத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படுகிறது.

இந்நிலையில், ஐஆர்சிடிசி இணையதளத்தில் நேற்று காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு, டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற முடியாமல் பயணிகள் அவதிப்பட்டனர்.இதையடுத்து, பயணிகள் சிலர் ரயில்நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களுக்கு சென்று, வரிசையில் காத்திருந்து டிக்கெட் முன்பதிவு செய்தனர்.

சர்வர் வேகம் அதிகரிக்க கோரிக்கை: இது குறித்து பயணிகள் சிலர் கூறியதாவது: ஐஆர்சிடிசி இணையதளத்தில் முன்பெல்லாம் ரயில் டிக்கெட் மட்டுமே முன்பதிவு செய்வார்கள். தற்போது, தனியார் பேருந்து டிக்கெட் முன்பதிவு, உணவுகள் ஆர்டர் செய்வது உட்பட பல்வேறு வசதிகளை பெற பயன்படுத்துகின்றனர். இதனால், ஒரே நேரத்தில் அதிகம் பேர் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, இணையதளம் முடங்கி விடுகிறது. அதுபோல, இன்று (ஜூலை 25) காலை திடீரென பல மணிநேரம் முடங்கிது. ஐஆர்சிடிசி செயலியிலும் அடிக்கடி கோளாறு ஏற்படுகிறது. எனவே, இதன் சர்வர் வேகம் அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து, ஐஆர்சிடிசி அதிகாரிகள் கூறுகையில்,"ஐஆர்சிடிசி இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு, மதியம் 1:50 மணி அளவில் சரி செய்யப்பட்டு, மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது. பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in