Published : 26 Jul 2023 06:31 AM
Last Updated : 26 Jul 2023 06:31 AM
சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் ஓட்டேரி நல்லா கால்வாயில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக தூர் வார வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
மாநகராட்சியின் அம்பத்தூர் மண்டலம், 84-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் ஓட்டேரி நல்லா கால்வாயை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது, இந்தக் கால்வாயில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கவும், வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக கால்வாயை தூர்வாரவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து, வில்லிவாக்கம் 94-வது வார்டு பகுதியில் செல்லும் ஓட்டேரி நல்லா கால்வாயையும் பார்வையிட்டு, அப்பகுதியிலும் பருவமழைக்கு முன்னதாக தூர் வார அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, 95-வது வார்டு, அகஸ்தியர் நகர் மற்றும் திருமங்கலம் சாலையில் உள்ள ஓட்டேரிநல்லா கால்வாயைப் பார்வையிட்டு, கால்வாயின் கரையோரங்களைப் பலப்படுத்திட அறிவுறுத்தினார்.
பின்னர், தேனாம்பேட்டை மண்டலம், 111-வது வார்டு உட்ஸ் சாலையில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை உடனடியாக அகற்றிடஉத்தரவிட்டார்.
இந்த ஆய்வுகளின்போது, அம்பத்தூர் தொகுதி எம்எல்ஏ ஜோசப் சாமுவேல், மத்திய வட்டார துணைஆணையர் எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான், மண்டலக் குழுத் தலைவர் பி.கே.மூர்த்தி, தலைமைப் பொறியாளர் (பொது) எஸ்.ராஜேந்திரன், சென்னை குடிநீர் வாரிய தலைமைப் பொறியாளர் ராமசாமி, நீர்வளத்துறை செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT