Published : 26 Jul 2023 06:40 AM
Last Updated : 26 Jul 2023 06:40 AM
சென்னை: சென்னை எழும்பூர் - திருச்சிராப்பள்ளி இடையே இயக்கப்படும் சோழன் விரைவு ரயிலின் நேரம் மாற்றப்படவுள்ளது. இதுபோல, சென்னையில் இருந்து இயக்கப்படும் குருவாயூர் விரைவு ரயிலின் நேரமும் மாற்றப்படவுள்ளது.
ரயில் தண்டவாள பராமரிப்பு பணி, பயணிகளுக்கான வசதிகள் உள்பட பல்வேறு காரணங்களுக்காக ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். அந்தவகையில், சென்னையில் இருந்து இயக்கப்படும் சோழன், குருவாயூர் ஆகிய விரைவு ரயில்களின் நேரம் ஆக.14-ம் தேதி முதல்மாற்றி அமைக்கப்பட உள்ளது.
7.45 மணிக்கு புறப்படும்: சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிராப்பள்ளிக்கு காலை 7.15 மணிக்கு புறப்படவேண்டிய சோழன் விரைவு ரயில் (22675) நேரம் மாற்றப்பட்டு, காலை 7.45 மணிக்கு புறப்படும். இந்த ரயில் தாம்பரத்தை 8.13 மணிக்கு அடையும். அங்கிருந்து புறப்பட்டு திருச்சிராப்பள்ளியை பிற்பகல் 2.30 மணிக்கு பதிலாக, பிற்பகல் 3 மணிக்கு சென்றடையும்.
திருச்சிராப்பள்ளியில் இருந்து சென்னை எழும்பூருக்கு சோழன் விரைவு ரயில் (22676) காலை 10.15 மணிக்கு பதிலாக, காலை 11 மணிக்கு புறப்படும். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை மாலை 5.30 மணிக்கு பதிலாக மாலை 6.15 மணிக்கு வந்தடையும்.
குருவாயூர் எக்ஸ்பிரஸ்: இதுதவிர, சென்னை எழும்பூர் - குருவாயூருக்கு இயக்கப்படும் விரைவு ரயில் (16127) காலை 9 மணிக்கு பதிலாக 9.45 மணிக்கு புறப்படும். நான்குநேரி வரை உள்ள நிலையங்களில் 5 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை நேரம் மாற்றப்பட உள்ளது.
இந்த இரு ரயில்களின் நேரம்மாற்றம் ஆக. 14-ம் தேதி முதல்அமல்படுத்தப்படுகிறது. இந்ததகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT