

சிவகங்கை: சிவகங்கையில் செயல்படாத மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கட்டிடத்துக்கு, பல லட்சம் ரூபாய் வரை மின் கட்டணம் செலுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை காந்தி வீதியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் தலைமை அலுவலகம் செயல்பட்டு வந்தது. கடந்த 1993-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கட்டிடம், காலப்போக்கில் முறையான பராமரிப்பின்றி முற்றிலும் சேதமடைந்தது. இக்கட்டிடத்தில் வங்கி, தலைமை அலுவலகம் செயல்பட பொதுப் பணித்துறை தடை விதித்தது.
இதையடுத்து, கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி காந்தி வீதியில் வாடகை கட்டிடத்துக்கும், தலைமை அலுவலகம் காஞ்சிரங்காலில் உள்ள கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்துக்கும் மாற்றப்பட்டன. அதன்பின்னர், நிதிநிலையை காரணம் காட்டி புதிய கட்டிடம் கட்டப்படவில்லை.
இந்நிலையில் 6 ஆண்டுகளாக செயல்படாத பழைய கட்டிடத்துக்கு பல லட்சம் ரூபாய் மின் கட்டணம் செலுத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இடிந்து விழும் நிலையில் இருப்பதாக எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது. அதேநேரம், அந்த கட்டிடத்தில் ஏடிஎம் மையம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதனால் அச்சத்துடனேயே வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மையத்துக்கு சென்று வருகின்றனர்.
இது குறித்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது, "சேதமடைந்த கட்டிடத்தை இடித்துவிட்டு, ரூ.60 லட்சத்தில் புதிய வங்கி கட்டிடம் கட்டப்பட உள்ளது. அதேபோல், காஞ்சிரங்காலில் ஊராட்சி அலுவலகம் அருகே ரூ.5.87 கோடியில் தலைமை அலுவலகம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்று கூறினர்.