தமிழக அரசு புதிய ஓய்வூதியத் திட்டத்தில் தடுமாறுவது ஏன்? - தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கேள்வி

தமிழக அரசு புதிய ஓய்வூதியத் திட்டத்தில் தடுமாறுவது ஏன்? - தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கேள்வி
Updated on
1 min read

சிவகங்கை: மாநில சுயாட்சி பேசும், தமிழக அரசு புதிய ஓய்வூதியத் திட்டத்தில் தடுமாறுவது ஏன் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கேள்வி எழுப்பி உள்ளது.

இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்டச் செயலாளர் ஆ.முத்துப்பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 2003 ஏப்ரலில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில் இதுவரை 6 லட்சம் ஊழியர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.

ஊழியர்களிடம் இருந்து ரூ.60 ஆயிரம் கோடி வரை பெறப்பட்டு, எல்ஐசி போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாக அரசு கூறியுள்ளது. ஆனால் இந்த திட்டத்தை எதிர்த்து ஜாக்டோ-ஜியோ உள்ளிட்ட அமைப்புகள் கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. திமுக தேர்தல் அறிக்கையில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தது.

இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஆதரவு திமுகவுக்கு கிடைத்தது. இந்நிலையில், புதிய ஓய்வூதியத் திட்டத்தில் மத்திய அரசு சில திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. அதை முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்வோம் என நிதியமைச்சர் கூறியிருப்பது, மாநில சுயாட்சியை உயர்த்தி பிடிக்கும் திமுக அரசின் கொள்கைகளுக்கு நேர் எதிராக உள்ளது.

ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப், இமாசலப் பிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகள் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு திரும்பிய நிலையில், தமிழக அரசு தயக்கம் காட்டுவது ஏன் என்பதை நிதியமைச்சர் விளக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in