

சேலம்: சேலத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழைக்கு 55 ஆண்டு பழமையான மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததால் பெரமனூர் பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் சேலம் மாநகரம் மற்றும் ஆனைமடுவு, தலைவாசல், காடையாம்பட்டி, கரியகோவில், தம்மம்பட்டி, பெத்த நாயக்கன்பாளையம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியும், சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்தும் ஓடியது.
சேலம் பெரமனூர் பிரதான சாலையில் இருந்த 55 ஆண்டு பழமையான மரம் நேற்று முன்தினம் இரவு கனமழைக்கு வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வழியாக வந்த வாகனங்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன. மாநகராட்சி ஊழியர்கள், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.
ஏற்காட்டில் கடந்த மூன்று நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை தொடங்கிய சாரல் மழை நேற்று வரை இடை விடாமல் பெய்தது. மழையுடன் காற்றின் வேகமும் அதிகமாக இருப்பதால் குளுமையான சீதோஷ்ண நிலை நீடித்து வருகிறது. சாரல் மழையால் வாகன ஓட்டிகள் பகல் நேரத்தில் முகப்பு விளக்கை ஓளிரவிட்டபடி சென்று வருகின்றனர்.
சேலம் மாவட்டம் முழுவதும் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): ஆனைமடுவு-16, தலைவாசல்-11, காடையாம்பட்டி, கரியகோவில் தலா -10, தம்மம்பட்டி-9, பெத்தநாயக்கன்பாளையம் 8, மேட்டூர் 7.6, கெங்கவல்லி, வீரகனூர் தலா 6, ஏற்காடு 5.6, சேலம் 4.2, எடப்பாடி 4, ஆத்தூர் 2 மி.மீ.மழை பதிவாகியுள்ளது.