Published : 02 Nov 2017 12:55 PM
Last Updated : 02 Nov 2017 12:55 PM

பருவமழை பாதிப்பு: அமைச்சர்கள், அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் ஆலோசனை

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பருவமழை பாதிப்பு குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. சென்னையைப் பொறுத்தவரை ஞாயிற்றுக்கிழமைமுதல் தீவிரமாக மழை பெய்து வருகிறது.

கனமழை, மழையால் தண்ணீர் தேங்கியுள்ள காரணங்களால் சென்னையில் செவ்வாய், புதன் கிழமைகளைத் தொடர்ந்து இன்று வியாழக்கிழமையும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை சுட்டிக்காட்டிய திமுக துணை பொதுச் செயலாளர் துரைமுருகன், "பருவமழை முன்னெச்சரிக்கை எடுக்கத் தவறிய அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பதை மட்டுமே நடவடிக்கையாக கொண்டுள்ளது" என விமர்சித்திருந்தார்.

இதற்கிடையில், நேற்று (புதன்கிழமை) கொடுங்கையூரில் தேங்கிய மழைநீரில் மின்கம்பி அறுந்து விழுந்ததில், அருகே விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதற்கும் அரசின் மெத்தனமே காரணம் எனக் கூறி எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில், பருவமழை பாதிப்பு தொடர்பாக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x