

ராஜீவ் கொலை வழக்கு கைதிகள் முருகன் - நளினி சந்திப்புக்கு விதிக்கப்பட்ட 2 மாத தடைக்காலம் ஒரு மாதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 2-ம் தேதி இருவரின் சந்திப்புக்கு சிறைத்துறை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதிகளாக உள்ள முருகன் வேலூர் ஆண்கள் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி வேலூர் பெண்கள் தனிச் சிறையிலும் அடைக்கப்பட் டுள்னர். இவர்கள் இருவரும் 15 நாட்களுக்கு ஒருமுறை சனிக்கிழமை நாளில் 30 நிமிடங்கள் சந்தித்து பேசிக்கொள்ளலாம்.
இந்த நடைமுறையின்படி வேலூர் ஆண்கள் மத்திய சிறை யில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெண்கள் தனிச் சிறைக்கு முருகனை போலீ ஸார் அழைத்துச் செல்வார்கள். அங்குள்ள நேர்காணல் அறையில் இருவரும் 30 நிமிடங்கள் பேசிக்கொள்வார்கள்.
இதற்கிடையே, மத்திய சிறையில் கைதிகளின் தொகுதிகளில் கூடுதல் சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் தலைமையிலான சிறைக் காவலர்கள் கடந்த மாதம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, முருகனின் கையில் இருந்த நோட்டுப் புத்தகத்தை பறித்து, சோதனை நடத்தியபோது, அதில், ரூ.2,400 பணம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சிறை விதிகளை மீறி முருகன் பணம் வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவருக்கான சில சலுகைகளை ரத்து செய்ய சிறைத்துறை நிர்வாகம் முடிவெடுத்தது. அதன்படி, மனைவி நளினியை சந்தித்துப் பேச 2 மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, தனக்கான தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என சிறைத்துறை நிர்வாகத்துக்கு முருகன் மனு அளித்திருந்தார். இந்த மனுவை பரிசீலித்த நிர்வாகம், 2 மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்ட சந்திப்பை 1 மாதமாக குறைத்துள்ளது. ஆகஸ்ட் 2-ம் தேதி வழக்கம்போல நளினி- முருகன் சந்திப்பு நடக்கும் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.