Last Updated : 16 Nov, 2017 05:23 PM

 

Published : 16 Nov 2017 05:23 PM
Last Updated : 16 Nov 2017 05:23 PM

மரணத்தின் கடைசித் தருவாயிலும் மகன் மீதான பாசத்தை வெளிப்படுத்திய பெற்றோர்: நெகிழ்ச்சியான உண்மைக் கதை

வேகமான வாழ்க்கை முறை மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக வயதான பெற்றோர்களை பிள்ளைகள் கைவிடும் சோக சம்பவங்கள் சமீப காலங்களில் நிறைய நடைபெறுகின்றன. நகர வாழ்க்கை என்பதைத் தாண்டி நரக வாழ்க்கையாக மாறிக்கொண்டிருக்கிறது.

இதில் சோக சம்பவமாக பிள்ளைகளால் கைவிடப்படும் பெற்றோர் வாழ்க்கையை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலை முடிவைத் தேடும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் திருப்பூரில் பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான கணபதி- வள்ளியம்மாள் தம்பதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம், நேற்று தெலுங்கானா மாநிலம் வெங்கட்ரபள்ளி கிராமத்தில் 90 வயது தம்பதி முத்தையா-லட்ச்சவா கவனிப்பாரற்று போனதால் விஷமருந்தி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் என்று இந்தப் பட்டியலை சொல்லிக்கொண்டே போகலாம்.

அக்.22-ம் தேதி சென்னை கொருக்குப்பேட்டையில் நடந்த சம்பவம் அனைவரையும் உருகவைத்து விட்டது. தங்களது மகனுக்குப் பாரமாக இருக்க விரும்பாத கிருஷ்ணவேணி (65), சண்முகம் (75) தம்பதியின் தற்கொலையும், அவர்கள் போலீஸாருக்கு விட்டுச் சென்ற கடிதமும்தான்.

அவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் எழுதிய கடிதத்தில், தாங்கள் நோய்க் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்வதாகவும், தங்களுடைய மகன் நன்றாகத்தான் பார்த்துக் கொண்டதாகவும் எழுதியிருந்தனர்.

தங்களது தற்கொலையைக் காரணமாக வைத்து, தங்கள் மகனை போலீஸார் தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் குறிப்பிட்டிருந்தனர். மரணத்தின் கடைசித் தருவாயிலும் தங்கள் மகனின் மீது அவர்கள் வைத்த பாசம் மற்றவர்களை நெகிழ வைத்தது.

வயதான காலத்தில் பெற்றோர்களை பராமரிக்க முடியாமல் பிள்ளைகள் கைவிடுவது வாழ்க்கை சூழ்நிலையா, வளர்ப்பு முறையா என்பது குறித்து 'தி இந்து' தமிழ் இணையதளம் சார்பில் நக்‌ஷத்ரா அமைப்பின் மன நல ஆலோசகர் ரகு ராமிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

''இக்காலத்துப் பிள்ளைகள் பெற்றோர்களை ஒரு சுமையாகப் பார்க்கிறார்கள், அதற்கு முக்கியக் காரணம் பொருளாதாரச் சூழ்நிலையும் தான். தங்களது வருமானம் தங்கள் குடும்பத்துக்கே போதாத போது பெற்றோரை சுமையாக பார்க்கும் நிலை ஏற்படுகிறது. அது மட்டுமின்றி பிள்ளைகளுக்கு பணம்தான் வாழ்க்கை என்ற மனநிலையில் வாழ பெற்றோரே கற்றுத் தருகின்றனர்.

இதனால், பாசம் என்ற ஒரு முக்கிய உணர்வை பிள்ளைகள் அவர்கள் அறியாமலே இழக்கின்றனர். தேவைக்கும், ஆசைக்கும் உள்ள இடைவெளியை பிள்ளைகளுக்கு பெற்றோர் சொல்லித் தர வேண்டும். கூட்டுக்குடும்ப வாழ்க்கையும் இதற்கு ஒரு தீர்வு'' என்றார்.

இந்திய அரசாங்கத்தின் சீனியர் சிட்டிசன் சட்டத்தின் கீழ், பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களை கடைசிக் காலத்தில் கவனித்துக்கொள்ள வேண்டும். கவனித்துக்கொள்ளாத பட்சத்தில் பிள்ளைகள் மீது பெற்றோர் அளிக்கும் புகாரின் பேரில் கடும் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் உள்ளது.

பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர், அவர்களை வளர்த்துப் படிக்க வைத்து நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்த பின்னர் தள்ளாத வயதில் பிள்ளைகளின் தயவை எதிர்பார்ப்பார்கள்.

என்ன செய்தார்கள், ஏன் பெற்றோரைப் பார்க்க வேண்டும் என்று நினைத்து புறக்கணிக்கும் பிள்ளைகளுக்கு தற்போது விடை தெரியாவிட்டலும், தாங்கள் பெற்றோர் என்ற நிலையை அடைந்து கடமைகளை செய்யும் போது உணர வாய்ப்பு கிடைக்கலாம், அப்போது அவர்களது பெற்றோர்கள் இருப்பார்களா? என்பது கேள்விக்குறியே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x