Published : 25 Jul 2023 09:24 PM
Last Updated : 25 Jul 2023 09:24 PM
சென்னை: "முந்தைய அதிமுக அரசு ஊர்ப்புற நூலகர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி வயிற்றில் அடித்தது. ஊர்ப்புற நூலகர்களுக்கு அதிமுக அரசு செய்த அதே துரோகத்தை திமுக அரசும் செய்து வருவது பெருங்கொடுமையாகும்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கிராமப்புற நூலகங்களில் பணியாற்றி வரும் ஊர்ப்புற நூலகர்களைப் பணி நிரந்தரம் செய்யாமலும், உரிய ஊதியம் வழங்காமலும் தமிழக அரசு தொடர்ந்து ஏமாற்றி வருவது வன்மையான கண்டனத்துக்குரியது. ஊர்ப்புற நூலகர்களில் பெரும்பாலானோர் மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண்களாக உள்ள நிலையில், அவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகளை வழங்க மறுத்து, அவர்களைப் பல ஆண்டுகளாக அலைக்கழிப்பது என்பது மிகுந்த மன வேதனை அளிக்கிறது.
தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் இயங்கிவரும் நூலகங்களில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் 15 ஆண்டுகளாக, ஏறத்தாழ 1512 நூலகர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அனைவரும் தங்களை, தற்போதுள்ள சிறப்பு காலமுறை ஊதியத்திலிருந்து, காலமுறை ஊதியத்துக்கு மாற்றிப் பணி நிரந்தரம் செய்யுமாறும், உரிய ஊதிய உயர்வு, பதவி உயர்வு ஆகியவற்றை வழங்கிடுமாறும் கோரி, கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஆனால், முந்தைய அதிமுக அரசு அவர்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி வயிற்றில் அடித்தது. ஊர்ப்புற நூலகர்களுக்கு அதிமுக அரசு செய்த அதே துரோகத்தை திமுக அரசும் செய்து வருவது பெருங்கொடுமையாகும்.
ஊர்ப்புற நூலகர்கள் கடந்த 15 ஆண்டுகளாகப் பணியாற்றியும்கூட, இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படாததால் அவர்கள் அரசு ஊழியர்களாகக் கருதப்படுவதில்லை. இதனால் அரசு ஊழியர்களுக்குக் கிடைக்கக்கூடிய விழாக்கால ஊக்கத்தொகை, பணிக்கொடை, பணப்பலன், உரிய ஓய்வூதியம், மருத்துவக் காப்பீடு ஆகியவை ஊர்ப்புற நூலகர்களுக்கு கிடைக்கப்பெறாமல் தவித்து வருகின்றனர். ஒரு நூலகம் திறக்கப்படும்போது பல சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன என்ற பொன் மொழிக்கு ஏற்ப, அறிவை வளர்க்கும் அரும்பணியில் ஈடுபட்டு வரும் நூலகர் பெருமக்களை வறுமையில் வாடவிடுவதும், அடிப்படை உரிமை கேட்டு வீதியில் இறங்கிப் போராடவிடுவதும் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.
ஆகவே, தமிழக அரசு ஊர்ப்புற நூலகர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்து உரிய ஊதியம் வழங்க அரசாணை வெளியிட வேண்டும் எனவும், அரசு ஊழியர்களுக்கு வழங்கும் அனைத்து உரிமைகளும் நூலகர் பெருமக்களுக்கும் கிடைக்கவும் ஆவன செய்திட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT