Last Updated : 25 Jul, 2023 08:28 PM

1  

Published : 25 Jul 2023 08:28 PM
Last Updated : 25 Jul 2023 08:28 PM

கடலூர், சிதம்பரம் பகுதிகளில் வலுவிழந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள்: இடித்து அகற்றப்படுமா?

கடலூர்: அரசு ஊழியர்களுக்கு குறைந்த வாடகையில் வீடுகள் தர வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழகம் முழுவதும் அவ்வப் போது தமிழ்நாடு அரசு வீட்டு வசதி வாரியம் அடுக்கு மாடி குடியிருப்புகளை கட்டி வருகிறது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு, கடலூர் மாவட்டத்தில் கடலூர் குண்டு சாலை, கடலூர் வில்வராய நத்தம், கடலூர் தேவனாம்பட்டினம், சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே உள்ள பகுதி மற்றும் சீர்காழி சாலை பகுதி, சின்ன கடைத்தெரு அருகில் ஆகிய பகுதிகளில் சுமார் 600-க்கும் மேற்பட்ட வீடுகளை அடுக்கு மாடி குடியிருப்புகளாக தமிழ்நாடு அரசு வீட்டு வசதி வாரியம் கட்டியது.

இதில் கடலூர், சிதம்பரம் பகுதியில் பல்வேறு அரசுத்துறைகளில் பணிபுரிந்த அரசு ஊழியர்கள் குடியிருந்து வந்தனர். இந்தகுடியிருப்புகள் அரசு ஊழியர்களுக்கு பேருதவியாக இருந்து வந்தது. பெரிய அளவு தரத்துடன் கட்டப்படாத நிலையில், 35 வரு டங்களைக் கடந்த இந்த அடுக்கு மாடி குடியிருப்புகள் கொஞ்சம், கொஞ்சமாக வலுவிழந்தன. கட்டிட மேற்கூரையின் சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து வருகின்றன. சுவர், தரைத்தள பகுதி, மாடிப்படி உள்ளிட்ட பல இடங்களில் விரிசல்ஏற்பட்டுள்ளது.

இதனால் இங்கு குடியிருந்த பலர் வீடுகளை காலிசெய்து, சென்று விட்டனர். ஆனாலும் சிலர் ஆபத்தை உணராமல் குடியிருந்து வருகின்றனர். கடலூர் வில்வராயநத்தம், தேவனாம்பட்டினம் பகுதி குடியிருப்பில் உள்ள சிலர் உடனே காலி செய்தால்வலுவிழந்துள்ள கட்டிடத்தை இடிப்பதற்கு ஏதுவாக இருக்கும்.

வலுவிழுந்துள்ள குடியிருப்புகளை இடித்து அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. சிதம்பரத்தில் சீர்காழி சாலை பகுதி, சின்ன கடைத்தெரு அருகில் உள்ள வலுவிழந்துள்ள குடியிருப்புகளில் அனைவரும் காலி செய்த நிலையில், இன்னும் இக்குடியிருப்பு கட்டிடங்கள் இடிக்கப்படாமல் உள்ளது.

யாரும் குடியிருக்காத நிலையில் கடலூர் குண்டுசாலை பகுதி, சிதம்பரத்தில் சீர்காழி சாலை பகுதியில் உள்ள குடியிருப்புகள் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. மதுபாட்டில் விற்பனை, பாலியல் தொழில் உள்ளிட்ட சமூக விரோத செயல்களுக்கு இந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த குடியிருப்புகளில் இருந்த கதவு, ஜன்னல் போன்றவைகளை பெயர்த்து சமூக விரோதிகள் எடுத்து சென்றுள்ளனர்.

இந்த கட்டிங்களைச் சுற்றி புதர் மண்டிக் கிடக்கிறது. இந்தக் கட்டிடங்கள் எப்போது வேண்டுமானாலும் இடித்து விழும் நிலையில் உள்ளது. இக்குடியிருப்புகளை இடித்து அகற்றி விட்டு, முறையாக திட்டமிட்டு நவீன முறையில் தரமாக புதிய குடியிருப்புகளை உருவாக்க வேண்டும் என்பதே கடலூர், சிதம்பரம் பகுதியில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களின் விருப்பமாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x