Published : 19 Nov 2017 08:44 AM
Last Updated : 19 Nov 2017 08:44 AM

இல்லத்தரசிகளை ரத்தக் கண்ணீர் வடிக்க வைக்கும் சின்ன வெங்காயம்: விலை குறையுமா? அதிகரிக்குமா?

ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் சில்லரை விலை ரூ.160 முதல் ரூ.170. விதைக்க வெங்காயம் இல்லாமல் விவசாயிகள் தவிக்கிறார்கள். எதிர்காலத்திலும் வெங்காயம் விளைச்சல் குறைந்து விலை எகிறும் என்றெல்லாம் அச்சுறுத்துகிறார்கள். அப்படி என்ன தான் ஆச்சு சின்ன வெங்காயத்துக்கு?

விவசாயிகள், வியாபாரிகள், வேளாண் அலுவலர்கள் என பலரை யும் சந்தித்தோம்.

‘சீனா, இந்தியா, அமெரிக்கா, துருக்கி, பாகிஸ்தானில் வெங்காயம் உற்பத்தி அதிகம். இதில் இந்தியாவுக்கு 2-ம் இடம். இந்த ஆண்டு பருவமழை இல்லை. பெரும் பகுதிகளில் கடும் வறட்சி. சில மாநிலங்களில் பெய்த மழை வெங்காயத்துக்கு பெரும் சேதத்தை தந்துவிட்டது. சென்ற ஆண்டு அதிக உற்பத்தியால் கட்டுபடியாகும் விலை கிடைக்காமல் கடும் நஷ்டம் ஏற்பட மூன்றில் ஒரு பகுதி வெங்காய விவசாயிகள் அதை பயிரிடவில்லை. ஆகவேதான் விலை ஏறிவிட்டது’ என்கிறார்கள் வேளாண் துறையினர்.

பெரம்பலூர் முதலிடம்

தமிழகத்தில் கோவை, பெரம்பலூர், திண்டுக்கல், தேனி, மதுரை, பண்ருட்டி என பல பகுதிகளில் சின்ன வெங்காயம் அதிகமாக பயிரிடப்பட்டாலும், பெரம்பலூர் முதலிடத்தில் உள்ளது.

10 அடி நீள பட்டறையில் ஒரு ஏக்கர் சாகுபடி வெங்காயத்தை 3 முதல் 4 மாத காலம் பாதுகாக்கலாம். இதற்கு ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் செலவாகும். 4 மாதங்கள் கழித்து எடுக்கும்போது 30 சதவீதம் எடை குறைந்துவிடும். இப்படி பாதுகாக்கப்படும் காலத்தில் காற்றில் ஈரப்பதம் மிகுந்திருந்தாலோ, மழை இருந்தாலோ அழுகிவிடும். இதையெல்லாம் கழித்து கூடுதல் விலைக்கு விற்க வேண்டும். இல்லாவிட்டால் கிடைத்த விலைக்கு விற்றே ஆக வேண்டும். இதில் ஒரு பகுதியைத்தான் விதை வெங்காயமாகவும் எடுத்து பயன்படுத்துகிறார்கள் விவசாயிகள்.

தவிர்த்த விவசாயிகள்

அப்போது விலை ஏறியிருந்தால் விதை வெங்காயமும் அதற்கேற்ப ஏறும். இறங்கியிருந்தால் மலிவாக கிடைக்கும். ‘கடந்த ஆண்டு பட்டறை போடும்போது கிலோ ரூ.20-க்கு விற்ற வெங்காயம், பட்டறை போடப்பட்டு 4 மாதம் கழித்தும் ஏறவில்லை. எனவே ஏக்கருக்கு போட்ட முதலீடு ரூ. 1 லட்சம் கூட கிடைக்கவில்லை. அதனால்தான் இந்த வருஷம் பெரும்பாலான விவசாயிகள் வெங்காய விவசாயத்தில் ஈடுபடவில்லை’ என்கிறார் ஆலாந்துறை நாதகவுண்டன்புதூரை சேர்ந்த விவசாயி விஜயக்குமார்.

‘20 வருஷமா வெங்காய விவசாயம் செய்யறேன். எப்பவும் 8 முதல் 12 ஏக்கர் வெங்காயம் போடுவேன். ஒரு வருஷம்கூட லாபம் கிடைச்சதில்லை. இந்த வருஷம்தான் விதை வெங்காயம் 1.5 டன் கிலோவுக்கு ரூ.60 கொடுத்து வாங்கி 3 ஏக்கரில் நடவுசெய்தேன். 4 மாசம் பட்டறை போட்டு, இப்ப கிலோ ரூ.120-க்கு வெங்காயம் வித்திருக்கேன்’ என்றார்.

வலையபளையம் பெரியசாமி என்ற விவசாயி கூறும்போது, ‘விவசாய விளைபொருளுக்கு சீரான விலையை அரசு நிர்ணயிக்கணும், விவசாயிகளுக்கு கட்டுபடியாகற விலையில் அது இருக்கணும்; அரசே அதை வாங்கி மக்களுக்கு கொடுக்கணும்னு போராட்டம் செஞ்சிருக்கோம். 4 மாசத்துக்கு முன்னாடி இந்த வெங்காயம் அறுவடை செஞ்சப்ப கிலோ ரூ.45-க்கு விற்றது. அந்த விலைக்கு கொடுத்தா என் உழைப்பு வீணா போயிடும்னு பட்டறை போட்டேன். இப்ப அதுல 40 சதவீதம் அழுகல், சருகு, காய்ச்சல், கழிசல்னு பாதி போயிடுச்சு. இன்றைக்கு பட்டறை கூலி, அழிமானம்னு கணக்குப் போட்டா, இப்ப அசலே கிலோவுக்கு ரூ.90-100ன்னு வந்துடும்.இப்ப கிலோ ரூ.105க்கு போயிருக்கு.நாலு வருஷமா பத்து பைசா கிடைக்காம கைநஷ்டப்பட்ட விவசாயி, இப்ப கைநஷ்டப்படாம, போன வருஷ நஷ்டத்தை வேண்ணா ஈடுகட்டியிருக்கான்னு சொல்லலாம்’ என்றார்.

வரத்து தொடங்கியது

பொள்ளாச்சி வியாபாரி சிவசண்முகம் கூறும்போது, ‘இந்த சீசன்லரூ.20-க்கு வெங்காயம் வித்தப்ப இதே ஏரியாவில் 100 வியாபாரிகளுக்கு மேல வந்தாங்க. இப்ப 20 வியாபாரிகள்கூட காணோம். நானே தினத்துக்கு 30 டன் முதல் 40 டன் வாங்கி அனுப்புவேன். இப்ப 10 டன்னுக்கும் குறைச்சலாத்தான் வாங்கறேன். இப்ப ஒரு வாரமா புது வெங்காயம் வர ஆரம்பிச்சுடுச்சு. விலையும் எறங்க ஆரம்பிச்சுடுச்சு. போன வாரமே இந்த பட்டியில ரூ.115-க்கு பேசிட்டேன். இப்ப கிலோ ரூ.105-க்கு எறங்கிடுச்சு’ என்றார்

செயற்கையான தட்டுப்பாடு

‘எந்த விவசாய விளைபொருளும் அறுவடை காலங்களில் விலை குறைவா இருக்கும். அதை விளைஞ்சதும் விற்கத்தான் பார்ப்பாங்க விவசாயிகள். 10 சதவீதம் விவசாயிக வேண்ணா பட்டறை போடலாம். அதனால அந்த நேரத்துல காசு உள்ள வியாபாரிகள் வாங்கி பட்டறை போட்டுட்டாங்கன்னா, பின்னால செயற்கையா ஒரு தட்டுப்பாட்டை ஏற்படுத்த முடியும். அப்புறம் பட்டறையில் உள்ள வெங்காயத்தை வெளியில் விடவும் முடியும். அதுதான் இங்கே நடக்குது. அப்படி நடக்கும்போது விவசாயியும் இதே வெங்காயத்தை வாங்கிறதுக்கு கடைக்குத்தான் போறான். தான் விளைவிச்சு ரூ.40-க்கு 3 மாசம் முன்னாடி கொடுத்த அதே வெங்காயத்தை ரூ.160 விலை கொடுத்து வாங்கறான். ஆக, இதுல மக்கள் மட்டுமில்லாம, விவசாயியும் பாதிக்கிறான்.

ஆதார விலை வேண்டும்

அதனாலதான் ஒவ்வொரு விளைபொருளுக்கும் ஒரு ஆதார விலையை, உற்பத்தி செலவையும் உள்ளடக்கி நிர்ணயம் செய்யச் சொல்லி அரசாங்கத்துகிட்ட கேட்டுட்டே இருக்கோம். குறிப்பிட்ட அந்த விளைபொருளுக்கு கிடைக்காவிட்டால், அதை அரசாங்கமே கொள்முதல் செய்து வாங்கி, நுகர்வோருக்கு வழங்கினால், போட்ட முதலுக்கு பங்கம் வராதுன்னு கேரண்டி கிடைச்சா, விவசாயி தைரியமாக எந்த பொருளையும் விளைவிப்பான்’ என்றார் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத் தலைவர் கந்தசாமி.

‘புது வெங்காயம் வர ஆரம்பிச்சுடுச்சு. போன வாரத்துக்கு, இந்த வாரம் வெங்காய விலை குறைஞ்சிடுச்சு. போதாதுக்கு வெங்காய விலை இப்படி ஏறுனதுல திரும்பின பக்கமெல்லாம் விவசாயிகள் வெங்காயமா போட்டிருக்காங்க. அதுவும் இனி மார்க்கெட்டுக்கு வர ஆரம்பிச்சுடும். இவ்வளவு பெரிய விலை இருந்த காலத்துல எல்லாம் மாபெரும் சரிவும் இருந்திருக்கு. அதுதான் வெங்காயம்’ என்கிறார் கோவை எம்ஜிஆர் மார்க்கெட் வியாபாரி அப்துல் ஹக்கீம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x