

புதுச்சேரி: நடைமுறை சிக்கல்களைத் தீர்த்து குஜராத் மாதிரி டயாலிசிஸ் முறையை புதுச்சேரியில் உடனடியாக செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவுப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார்.
குஜராத் மாதிரி டயாலிசிஸ் முறையை புதுச்சேரியில் நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்தாலோசனைக் கூட்டம் துணைநிலை ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தலைமைச் செயலர் ராஜுவ் வர்மா, சுகாதாரத் துறைச் செயலர் உதயகுமார், நிதித்துறைச் செயலர் ஜவகர், துணைநிலை ஆளுநரின் செயலர் அபிஜித் விஜய் சௌதரி, சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் ஸ்ரீராமலு மற்றும் மருத்துவ அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
குஜராத்தில் இருந்து டாக்டர் விநித் மிஷ்ரா தலைமையிலான குஜராத் சிறுநீரக நோய் ஆராய்ச்சி (IKDRC) நிறுவனத்தின் மருத்துவ அதிகாரிகளின் குழு காணொலி வாயிலாக கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில், துணைநிலை ஆளுநர் அதிகாரிகளுக்கு பின்வரும் ஆலோசனைகளை வழங்கினார். அதன்விவரம்: ''வெற்றிகரமாக நடைபெற்று வரும் குஜராத் மாதிரி டயாலிசிஸ் முறையை புதுச்சேரியில் உடனடியாக செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவுப்படுத்த வேண்டும். அதில் உள்ள நடைமுறை சிக்கல்களை தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
மேலும், தற்போது உள்ள உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டு உடனடியாக டயாலிசிஸ் திட்டத்தை தொடங்க வேண்டும். முதலில் புதுச்சேரியிலும் அதனைத் தொடர்ந்து காரைக்கால் பகுதியிலும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திட்டத்தை செயல்படுததுவதற்கு வசதியாக மருத்துவமனைகளின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். டாயாலிசிஸ் திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.