

மதுரை: மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில், மோசடி வழக்கில் சிக்கிய ‘நியோ மேக்ஸ்’ நிறுவன அலுவலகங்களில் பொருளாதார குற்றத் தடுப்பு போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் சொத்து ஆவணங்கள், பொருட்களை கைப்பற்றினர்.
விருதுநகரை தலைமையிடமாகக் கொண்டு ‘நியோ-மேக்ஸ்’ என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் செயல்பட்டது. இந்நிறுவனத்துக்கு சொந்தமான 12-க்கும் மேற்பட்ட துணை நிறுவனங்களும் பல்வேறு மாவட்டத்தில் இயங்கின. இந்நிறுவனங்கள் கூடுதல் வட்டி தருவதாகவும், குறிப்பிட்ட ஆண்டில் அசல் தொகைக்கு இரடிப்பு தொகை வழங்குவதாகவும் ஆசை வார்ததைகளை கூறி, வாடிக்கையாளர்களை கவர்ந்தனர். இதன்மூலம் சுமார் ரூ.5,000 கோடிக்கு மேல் பணம் வசூலித்து ஏமாற்றியதாக பல்வேறு புகார்கள் எழுகின்றன.
இந்நிலையில், சாத்தூர் கோவில்பட்டியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட ஒருவர் கொடுத்த புகாரின் பேரில், ‘நியோ மேக்ஸ்’ மற்றும் துணை நிறுவனங்களின் இயக்குநர்கள் மதுரை கமலக் கண்ணன் (55), பாலசுப்பிரமணியன் (54), திருச்சி வீரசக்தி (49), முகவர்கள் காரியாப்பட்டி மணிவண்ணன், செல்லம்மாள் உள்ளிட்ட நிறுவனங்களின் இயக்குநர்கள் மீது மதுரை பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு போலீஸில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கில் இதுவரை நெல்லை நிறுவனம் இயக்குநர்கள் தேவகோட்டை சைமன் ராஜா, மதுரை அச்சம்பத்து கபில், தூத்துக்குடி இசக்கி முத்து, சகாயராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் முக்கிய நபர்களான கமலக்கண்ணன் உட்பட 3 பேர் தொடர்ந்து தலை மறைவாகியுள்ளனர். அவர்களை போலீஸார் தேடுகின்றனர்.
இந்நிலையில், அந்தந்த பகுதியிலுள்ள இந்த நிறுவனங்களின் முகவர்கள், ‘முதலீட்டாளர்களிடம் போலீசில் புகார் அளித்தால் பணம் கிடைக்காது’ என மிரட்டியும், ‘நாங்கள் பணத்தை வாங்கி தர ஏற்பாடு செய்கிறோம்’ என செல்போன் மூலம் பேசியும், குறுந்தகவல்களை அனுப்பியும் வருகின்றனர். இதனால், முதலீட்டாளர்கள் புகார் அளிக்க தயங்கிய நிலையில், மதுரை ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பாதித்தோரிடம், ‘புகார் மனு மேளா’ என்ற பெயரில் நூற்றுக்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் பெற்று விசாரிக்கின்றனர்.
இதற்கிடையில், ‘நியோ- மேக்ஸ்’ மற்றும் அதன் தொடர்புடைய மதுரையிலுள்ள ‘நியோ மேக்ஸ் ’ டெவலப்பர், லைவ் ஸ்மார்ட் பிராப்ரட்டி, ரியல்டர்ஸ், எக்ப்ரோ ரிடைல், லைவ் பிரைடு பிராப்ரட்டி, சென்சூரியன், வென்டுரா பிராப்ரட்டி ஆகிய நிறுவனங்கள் மீதும், விருதுநகரில் சபோரோ பிராப்ரட்டி, அட்லாண்டினோ டெவலப்பர் நிறுவனத்திலும், திண்டுக்கல் முத்து நகரிலுள்ள லூமை பிராப்ரட்டிஸ், காரைக்குடி 100 அடி சாலையிலுள்ள ரிபேகோ பிராப்ரட்டி, மற்றும் நெல்லை பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் ரீகேஷன் பிராப்ரட்டி, தேனி - பழைய ஸ்ரீராம் தியேட்டர் அருகே அஸ்டோனீஸ் பிராப்ரட்டி, கம்பத்தில் மிலைனோ டெவலப் பர்ஸ், திருவாரூர் கீழ வீதியிலுளள லிபர்டைல்ஸ் நிறுவன அலுவலகங்களில் அந்தந்த மாவட்ட பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலீஸார் குழுக்களாக பிரிந்து ஒரே நாளில் சோதனை நடத்தினர்.
மதுரையில் டிஎஸ்பி குப்புசாமி தலைமையிலும் சோதனை நடந்தது. இச்சோதனைகளில் மோசடி தொடர்பாக சொத்து ஆவணங்கள், பொருட்களை கைப்பற்றியதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.