

மதுரை: விவசாயிகளுக்கு லாபம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் உழவர் சந்தைகள் தொடங்கப் பட்டன. அடுத்தகட்டமாக விளை பொருட்களை மதிப்புக் கூட்டிய பொருட்களாக விற்பதை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன.
இதனால் தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானியம், உதவிகளை வழங்குவதைத் தவிர்த்து குழுவாகச் (கிளஸ்டர்) செயல்படும் விவசாயிகளுக்கு உதவிகள் வழங்கப் படுகின்றன. இதன்மூலம் விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்ற திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. அதன்படி, மதுரை மாவட்டம், கொட்டாம் பட்டியை மையமாக வைத்து ஐந்திணை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மூலம் விவசாயிகள் ஒன்றிணைந்து செயல்பட்டு லாபம் ஈட்டி வருகின்றனர்.
இது குறித்து அதன் நிர்வாக இயக்குநர் ந.அருணாச்சலம் (34) கூறியதாவது: 7 ஏக்கரில் தென்னை, 3 ஏக்கரில் கடலை பயிரிட்டு இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். என்னைப் போன்ற எண்ணம் கொண்ட விவசாயிகளுடன் இணைந்து ஐந்திணை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை ஏற்படுத்தினோம். இந்த நிறுவனத்தில் மதுரை மாவட்டத்தில் 250 விவசாயிகளும், 32 மாவட்டங்களில் 5,000 விவசாயிகளும் இணைந்துள்ளனர்.
இதன் மூலம் விளைபொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்து வருகிறோம். அதோடு, பிற விவசாயிகளுக்கும் வழிகாட்டுகிறோம். மத்திய, மாநில அரசுகள் வழங்கும் மானியத்தைப் பெறவும், கடனுதவி பெறவும் வழிகாட்டுகிறோம்.
எங்களது நிறுவனத்தில் தமிழ்நாடு ஏற்றுமதி வாரிய துணைத் தலைவரான ராஜமூர்த்தி, ஊட்டியைச் சேர்ந்த மகாமகா பில்லியப்பன், விவசாயிகள் ஆதிமூலம், மணிகண்டன் உட்பட பலர் இயக்குநர்களாக இருந்து வழிகாட்டுகின்றனர். விவசாயம் லாபகரமான தொழிலாக இருந்தால்தான், அதில் ஈடுபட இளைய தலைமுறையினர் முன்வருவார்கள். அதைக் கருத்தில் கொண்டு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறோம் என்று கூறினார்.