

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கால்வாய் தூர்வாரும் பணியில் தொய்வு ஏற்பட்டதால், தாமதமாக தண்ணீர் கிடைத்த பகுதிகளில் இரு மாதங்களுக்கு பின்னர் கன்னிப்பூ சாகுபடி பணியை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 6,500 ஹெக்டேரில் இருந்த நெல் வயல்பரப்புகள், கடந்த இரு ஆண்டுகளாக 6, 000 ஹெக்டேராக குறைந்துள்ளது. குமரியில் நடைபெறும் கன்னிப்பூ, கும்பப்பூ ஆகிய இருபோக சாகுபடிக்கு பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணை தண்ணீர் கைகொடுத்து வருகிறது. இந்த ஆண்டு கன்னிப்பூ சாகுபடி பணிகள் குளத்து பாசன பகுதிகளில் வழக்கம் போல் ஜூன் மாதத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகவே தொடங்கின.
ஜூன் 1-ம் தேதி பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் பாசன நீர் பாதிக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களுக்கு கிடைக்கவில்லை. இதற்கு காரணம் திட்டமிட்டபடி பாசன கால்வாய்களை தூர்வாரும் பணி முறையாக நடைபெறவில்லை. இதைப் போல் பல இடங்களில் கால்வாய்களில் கரைகட்டுதல், சீரமைப்பு பணிகளும் குறித்த நாட்களில் நடைபெறவில்லை.
இதனால், பேயன்குழி இரட்டைக்கரை கால்வாய், இரணியல் கால்வாய், புத்தனாறு கால்வாய், ஆளூர், வீராணி பகுதிகள் என, பல இடங்களில் பாசன நீர்கிடைக்காமல் வயல்பரப்புகள் தரிசாகவும், மேய்ச்சல் நிலங்களாகவும் கிடந்தன. கடைமடை பகுதிக்கு தண்ணீர் போய் சேராததால், பாதிக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் நெல் நடவு பணிகள் நடைபெறவில்லை.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக இரட்டைக்கரை கால்வாய் உட்பட பல இடங்களில் கால்வாய்களில் தண்ணீர் வருகிறது. இதை பயன்படுத்தி இரு மாதத்துக்கு பின்னர் தற்போது 500 ஹெக்டேரில் விவசாயிகள் சாகுபடி பணிகளைத் தொடங்கியுள்ளனர். வயல்களை கலக்கி உழுது, மரம் அடித்து சமப்படுத்தி நடவு பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஜூன் மாதத்துக்கு முன்னரே தொடங்கும் நெல் நடவுப்பணி, இருமாதம் தாமதமாக தொடங்குவதால், அறுவடை பணியும் நவம்பருக்கு மேல் ஆகிவிடும் என விவசாயிகள் தெரிவித்தனர்.