Published : 25 Jul 2023 05:03 AM
Last Updated : 25 Jul 2023 05:03 AM

பருவநிலை மாற்றத்தை உலக நாடுகள் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும்: ஜி20 மாநாட்டில் பிரதமரின் முதன்மை செயலர் வலியுறுத்தல்

சென்னை: பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் பேரிடர்களை உலக நாடுகள் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும் என்று ஜி20 மாநாட்டின் பணிக்குழு கூட்டத்தில் பிரதமரின் முதன்மை செயலர் பி.கே.மிஸ்ரா வலியுறுத்தினார்.

உலகளவில் பொருளாதாரத்தில் நிலவும் சிக்கல்களை தீர்ப்பதற்காக ஜி-20 அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் அமெரிக்கா, சீனா, இந்தியா உள்ளிட்ட 20 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் 2022-23-ம் ஆண்டுக்கான தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது.

இதையடுத்து நாடு முழுவதும் 50 நகரங்களில் பல்வேறு துறைகளின் சார்பில் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி கல்வி, நிதி, மகளிர் மேம்பாடு சார்ந்த பணிக்குழு கூட்டம் சென்னையில் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பேரிடர் அபாயத் தணிப்பு பணிக்குழுவின் இறுதிக் கூட்டம் சென்னையில் நேற்று தொடங்கியது.

தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பிரதமரின் முதன்மைச் செயலர் பி.கே.மிஸ்ரா பேசியதாவது: உலக அளவில் பருவநிலை மாற்றம் பெரும்அச்சுறுத்தலாக நிலவி வருகிறது. இதனால் ஏற்பட போகும் பாதிப்புகள் வெகு தொலைவில் இல்லை. உலகில் உள்ள அனைவரையும் இந்த பருவநிலை மாற்றம் பாதிக்கும். எனவே, நாம் அனைவரும் புதிய பேரிடர்களை எதிர்கொள்ள தயாராக வேண்டும். இந்தியாவை பொருத்தவரை பல பேரிடர்களை சந்தித்துள்ளது. குறிப்பாக கிழக்கு, மேற்கு கடலோரப் பகுதிகள் அதிக புயல்களால் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது டெல்லி இதுவரை இல்லாத கனமழையை எதிர்கொண்டுள்ளது.

இத்தகைய பேரிடர்களை தவிர்க்க தேவையான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக பேரிடர்களை முன்கூட்டியே கண்டறிந்து பாதிப்புகளை தவிர்க்க உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.மேலும், பேரிடர் மேலாண்மைக்கான நிதி ஒதுக்கீட்டில் அனைத்து நாடுகளும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இந்தியாவில் பேரிடர் கட்டமைப்புகள் மற்றும்செயல்பாடுகளில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பேரிடர் பாதிப்பை குறைப்பதற்கு தனியார் நிறுவனங்கள் பங்களிப்பும் தேவையாக இருக்கிறது. ஆனால், அதற்கான நிதியை திரட்டுவது சவாலாக இருக்கிறது. அதனால் பேரிடர் மேலாண்மைக்கான தனியார் முதலீட்டை ஈர்ப்பதற்கு அரசுகள் செய்ய வேண்டியவை, அவை சிஎஸ்ஆர் நிதியாக மட்டுமின்றி அந்த நிறுவனங்களின் முக்கிய வணிகத்தின் ஒருபகுதியாக இருப்பதை உறுதி செய்ய முடியுமா என்பன போன்ற அம்சங்கள் குறித்து இந்த ஜி20- மாநாட்டில் விவாதிக்க வேண்டியது அவசியமாகும். ஜி20 சார்ந்து இதுவரை நாட்டின் பல்வேறு நகரங்களில் 177 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இன்னும் ஒன்றரை மாதங்களில் நடைபெற உள்ள உச்சி மாநாடு ஒரு மைல்கல்லாக அமையும். இவ்வாறு அவர் பேசினார்.

ஐநா பொதுச் செயலாளரின் சிறப்புப் பிரதிநிதி மமி மிசுடோரி பேசுகையில், ‘‘துருக்கியில் நடப்பாண்டு துவக்கத்தில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. பல்வேறு உயிர்கள் பலியாகின. இந்த நிகழ்வு, பேரிடர் அபாயங்களை குறைப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய பணிகளை நமக்கு எடுத்துரைக்கிறது. ஐரோப்பாவில் வெப்ப அலைகளாலும், ஆப்பிரிக்காவில் வறட்சியாலும் பலர் இறந்துள்ளனர். பேரிடர்கள் குறித்து முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் அவசியம். இந்த கூட்டம், பேரிடர் கால அபாயங்களை தவிர்க்க தேவையான கொள்கைகளை வகுக்கும் என்பதில் சந்தேகமில்லை’’ என்றார்.

அதன்பின் கூட்டத்தில் துரிதமுன்னெச்சரிக்கை, பேரிடர்காலநிதி மேம்பாடு, சுற்றுச்சூழல் மேம்பாடு, மீட்பு நடவடிக்கைகள், பேரிடர்கால மீட்புக்கான கட்டமைப்பு ஆகிய 5 முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. அதன் அடிப்படையிலான கருத்துரு அறிக்கைக்கு பணிக்குழு கூட்டத்தின் இறுதிநாளான இன்று (ஜூலை 25) ஒப்புதல் வழங்கப்படும். அந்த அறிக்கையானது ஜி20 நாடுகளுக்கு இடையான தலைவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் ஜி 20 மாநாட்டின் தலைவர் அமிதாப் காந்த், தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர் மற்றும் ஜி 20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x