

பெசன்ட் நகர் கடற்கரையில் இளம் பெண்ணை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்த காதலனை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் வரிசையாக கடைகள் இருக்கும் இடத்தில் குழந்தைகளுக்கான ராட்டினம் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது. அந்த ராட்டினத்தின் கீழே திங்கள்கிழமை காலையில் இளம் பெண் ஒருவர் இறந்து கிடந்தார். அவரது கழுத்தில் துப்பட்டா இறுக்கி இருந்தது. துப்பட்டாவால் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டிருப்பது தெரிந்தது.
இதுகுறித்து சாஸ்திரி நகர் காவல் துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் ஆய்வாளர் கிறிஸ்டில் ஜெயசில் தலைமையி லான காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பெண்ணின் உடலை மீட்டு ராயப் பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை நடந்த இடத்தின் அருகே ஒரு செல்போனை போலீஸார் கண்டுபிடித்தனர். அதை வைத்து நடத்தப்பட்ட விசார ணையில் கொலை செய்யப்பட்டு கிடந்த பெண்ணின் விவரங்கள் தெரியவந்தன.
சென்னை கோட்டூர்புரம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார். தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்க்கிறார். இவரது மகள் நித்யா (23). அடையார் புற்று நோய் மருத்துவமனையில் துப்புர வுத் தொழிலாளியாக வேலை செய்கிறார். இதே மருத்துவமனை யில் சக தொழிலாளியாக இருப்பவர் ஏழுமலை. நித்யாவும், ஏழுமலையும் காதலித்துள்ளனர். ஏழுமலையின் நடவடிக்கைகள் பிடிக்காததால் அவரிடம் இருந்து பிரிந்திருக்கிறார் நித்யா. இந்நிலையில் வேறொரு நபருடன் நித்யாவுக்கு தொடர்பு ஏற்பட்டதாகவும், இதனால் ஏழுமலை ஆத்திரமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமை மாலையில் நித்யாவின் வீட்டுக்கு எழுமலை சென்றிருக் கிறார். நித்யாவின் பெற்றோரிடம் கூறிவிட்டு அவரை வெளியே அழைத்துச் சென்றிருக்கிறார். நித்யாவின் பெற்றோருக்கு ஏழுமலையை ஏற்கெனவே தெரியும் என்பதால் அவர்களும் தடுக்கவில்லை. பின்னர் இருவரும் பெசன்ட் நகர் கடற்கரைக்கு சென்று, ராட்டினத்தின் அடியில் அமர்ந்து பேசியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து ஆத்திரம் அடைந்த ஏழுமலை, நித்யா அணிந்திருந்த துப்பட் டாவை வைத்தே அவரது கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இரவு நீண்ட நேரமாகியும் நித்யா வீட்டுக்கு வராததால் அவரது செல்போன் எண்ணுக்கும், ஏழுமலையின் செல்போன் எண்ணுக்கும் நித்யாவின் தந்தை தொடர்பு கொண்டிருக்கிறார். ஆனால், எதிலுமே பதில் கிடைக்கவில்லை.
மறுநாள் காலையில் நித்யாவின் உடல் அருகே கண்டெடுக்கப்பட்ட செல்போன் மூலம் போலீஸார் பேசிய பிறகே அனைத்து தகவல்களும் தெரியவந்தன.
ஏழுமலையின் சொந்த ஊர் புதுச்சேரி. அவர் புதுச்சேரிக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவரை பிடிக்கும் முயற்சியில் சாஸ்திரி நகர் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.