

அரியலூர்: செந்துறை அருகே பட்டியலின இளைஞரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்ததாக எழுந்த புகாரின்பேரில், நேற்று முன்தினம் ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும், திமுக பிரமுகர் உட்பட 30 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த வாளரகுறிச்சி ஆதிதிராவிடர் தெருவில் வசித்து வருபவர் அன்பரசன் (34). பாஜக செந்துறை தெற்கு ஒன்றிய செயலாளர். இவர், தனது மகளுக்கு ஜூலை 7-ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடத்தினார். இதையொட்டி, அவரது உறவினர்கள் சீர்வரிசை தட்டுகளுடன் மாற்று சமூகத்தினர் வசிக்கும் தெருவின் வழியாக பட்டாசு வெடித்துக் கொண்டு சென்றுள்ளனர்.
அதன்பின், ஜூலை 9-ல் அன்பரசனை அழைத்து, தங்கள் தெருவில் இனி பட்டாசு வெடிக்கக் கூடாது என திமுக கிளைச் செயலாளர் கண்ணன்(48), ராஜேஷ் (27) உட்பட 10 பேர் தெரிவித்துள்ளனர். அதற்கு அன்பரசன், ‘‘வெளியூரிலிருந்து வந்த எனது உறவினர்கள்தான், பட்டாசு வெடித்தனர்” என கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.
இதையறிந்த அன்பரசனின் தம்பி திருநாவுக்கரசு(32), மாற்று சமூகத்தினரிடம் இதுகுறித்து கேட்டபோது, இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த இரும்புலிக்குறிச்சி போலீஸார், இருதரப்பினரையும் காவல் நிலையத்துக்கு வரும்படி கூறிவிட்டுச் சென்றனர்.
இதற்கிடையே, ஜூலை 12-ம் தேதி இருதரப்பையும் சேர்ந்த சிலர், முக்கிய நபர்களின் முன்னிலையில் சமாதானம் பேசியுள்ளனர். அப்போது, அனைவரின் முன்னிலையிலும் திருநாவுக்கரசுவை மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வைத்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், இருதரப்பினரும் காவல் நிலையத்துக்குச் சென்று, தங்களுக்குள் சமாதானம் செய்துகொண்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இருதரப்பினரிடமும் போலீஸார் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பினர்.
இந்நிலையில், காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்ததாக முகநூலில் அன்பரசன், திருநாவுக்கரசு ஆகியோர் பதிவிட்டுள்ளனர். இதையறிந்த இரும்புலிக்குறிச்சி போலீஸார் அன்பரசனை அழைத்து, சம்பவம் குறித்து புகாரை பெற்று, வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், இந்த வழக்கு தொடர்பாக ராஜேஷை நேற்று முன்தினம் கைது செய்த போலீஸார், திமுக பிரமுகர் கண்ணன் உட்பட 30 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.